ஒருவரை உயர்த்திவிட ஆள் இல்லை என்றாலும் கோள் இருக்கிறது. அடுத்த நிமிடம் எப்படி? நாளை பொழுது எப்படி போகும்?, என்று சிந்திப்பதிலேயே வறுமை உள்ளவனின் நாள் போகிறது. வறுமையில் வாடி வதங்கும் சோகத்தின் அதிபதி யோகத்தின் அதிபதியாவது எப்போது – எப்படி? மாயை – மந்திரம் இவைகளுக்கு விடை கொடுப்பதுதான் கிரகங்களின் விளையாடல். வறுமையில் இருந்தவனை – துன்பத்தில் துவண்டு போனவனை அந்தஸ்தில் உயர்த்திவிடுவதும் கிரக யோகங்களே. அதிலும் கூட்டு கிரகங்கள் வியக்கும் வண்ணம் ஒருவனை உயர்த்தி விடுகிறது. கூட்டு கிரகங்கள் வாரி கொடுக்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் தனஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 2-ம் இடம். சுகஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 4-ம் இடம். பஞ்சமஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 5-ம் இடம். அஷ்டமஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 8-ம் இடம் பாக்கியஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 9-ம் இடம். ஜீவனஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 10-ம் இடம். லாபஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 11-ம் இடம் விரையஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 12- இடம்.
இதில் லக்கினம் என்கிற 1-ம் இடம், கீர்த்தி தரும். சஷ்டம ஸ்தானம் என்பது, 3-ம் இடம். சத்ருஸ்தானம் என்பது 6-ம் இடம். சப்தமஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 7-ம் இடம்.
மேற்கண்ட இவ்விடங்களில் கூட்டு கிரகங்கள் இருந்தால் யோகத்தை அள்ளி கொடுக்காமல் போனாலும் ஓரளவாவது கிள்ளி கொடுக்கிறது.
ஆனால் அதுவே, இந்த கூட்டு கிரகங்களில் லக்கினாதிபதி சேர்ந்திருந்தால் வறுமை பந்து போல் பறந்துவிடும். வசதி-வாய்ப்புகள் தேவைக்கு அதிகமாக கிடைக்கும். யோகமோ யோகம்தான்.
பொதுவாக கூட்டு கிரகங்களை யுத்த கிரகம் என்பார்கள். அதாவது கூட்டு கிரகங்கள் உள்ள ஜாதகருக்கு அந்த கிரகங்களில் ஒவ்வொன்றும், “நான் யோகம் தர மாட்டேன் நீ செய்.” நீ செய்யாவிட்டால் நான் ஏன் செய்ய வேண்டும்?” என்று அந்த கூட்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு, அந்த ஜாதகருக்கு பலன் எதுவும் தராது. இதைதான் கிரக யுத்தம் என்று சொல்கிறது ஜோதிடகலை.
ஆனால், அந்த கூட்டு கிரகங்களில் இருக்கும் ஏதேனும் ஒரு கிரகத்தின் திசை வந்து விட்டால், “நீங்கள் யாரும் யோகம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இதோ நான் செய்கிறேன் யோகத்தை” என்று அந்த கிரக தசாநாதன் தோலைதட்டிக் கொண்டு வருவான்.
ஆகவே ஒருவரின் ஜாதகத்தில் கூட்டு கிரகங்கள் இருந்தால், நிச்சயம் அந்த ஜாதகரை பாக்கியசாலியாக்குமே தவிர துன்பம் செய்யாது. உங்கள் ஜாதகத்தில் கூட்டு கிரகங்கள் உள்ளதா? உங்கள் முயற்சிக்கு வெற்றி தந்திட கூட்டு கிரகங்கள் கூட்டணி சேரும். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக