பிறக்கும் போதே புகழ் அடைந்தவர்கள் அதிகம் யாருமில்லை. உழைப்பும், வெற்றியும் தோல்வியும் அது தரும் அனுபவமும்தான் ஒருவரை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. அவர்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் பெறுகிறார்கள்.
எல்லோரும் அப்படி செல்வாக்கு பெற முடியுமா? என்றால் முடியாது. எல்லோரும் தனம் – கீர்த்தி அடைந்துவிட முடியுமா? என்ற கேள்விக்கு அவரவரின் ஜாதகம் விடை சொல்லும்.
ஜாதகத்தில் முக்கியமாக லக்கினாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி நன்றாக இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவை லக்கினத்திற்கு 6,8,12-ல் இருக்கக்கூடாது. சரி அப்படி இருந்து விட்டால் நல்லபலன் தராதா? என்று கேட்டால், தரும், ஆனால் லக்கினாதிபதியோ, பஞ்சமாதிபதியோ, பாக்கியாதிபதியோ, அதாவது லக்கினத்திற்குரியவன், 5-க்குரியவன், 9-க்குரியவன்’நல்ல சாரத்தில்’ அமர்ந்து விட்டால் யோகமோ யோகம்தான்.
சிலர் உலகபுகழ் பெறுகிறார்கள். மக்கள் மத்தியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நபராக இருக்கிறார்கள். அது எப்படி? அதற்கு, ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 10-க்குரியவன் அருள் செய்ய வேண்டும். இல்லை என்றால் பத்தாம் இடத்தை சனி பார்க்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் மக்கள் மத்தியில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களாக திகழ்வார்கள்.
சரி. இதற்கு ஒரு உதாரண ஜாதகம் வேண்டாமா?
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வறுமையை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தவர் அவர். தங்குவதற்கு இடம் இல்லாமல் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உறங்கியவர். வறுமையை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தாலும், அவருக்கே தெரியாமல் தைரிய லஷ்மியும் அவருக்கு துணையாக வந்தாள்.
அது 1981. வருடம். திருச்செந்தூரில் இருந்து வீட்டை விட்டு சென்னைக்கு வந்த அவருக்கு படிப்பு 8-ம் வகுப்பு மட்டும்தான். கையில் பணமோ, சென்னையில் மற்றவர்களின் ஆதரவோ எதுவும் கிடையாது. எழும்பூரைச் சுற்றியுள்ள எல்லா இடத்திலும் வேலை கேட்டு பார்த்தார். எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் இவர் சோர்ந்துப்போய் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், சந்தேகக் கேஸில் இவரைக் கைது செய்ய அடித்து எழுப்பினார் ஒரு போலீஸ்காரர்.
அந்த போலீஸ்காரர் ’உன் பெயர் என்ன?’ என்று கேட்க, தன் பெயரை சொன்னார். அவர் பெயர்தான் அந்த போலீஸ்காரருக்கும். இருந்தாலும், ஏற்கனவே அங்கே நின்று கொண்டிருந்த ஒரு சிறு கும்பலுடன் போய் இவரையும் நிற்கச் சொன்னார் போலீஸ்காரர்.
ஒன்றும் புரியாமல் பக்கத்திலிருந்தவரிடம் பேச்சு கொடுத்த அவருக்கு, இந்த கும்பலுடன் நின்றுகொண்டிருந்தால் சிறையிலடைத்து விடுவார்கள் என்பதை புரிந்துக்கொண்டார். அந்த சமயம் அந்த போலீஸ்காரர் இன்னொருவனை எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். இதை பார்த்த போலீஸ்காரரும் இவரை விடாமல் துரத்தினார்.
கொஞ்ச தூரம் ஓடியவர் திரும்பி பார்த்த போது அந்த போலீஸ்காரர் இல்லை. ஆனால் ஓடி ஓடி களைத்துப் போனவருக்கு நிறைய பேர் வரிசையாக நின்று கொண்டிருக்கும் ஒரு இடம் கண்ணில்பட்டது. இதுதான் தமக்கு பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்த அவர், அங்கேயே நின்றுவிட்டார். பாதி தூக்கமும் ஓடி வந்த சோர்வும் ஒன்றுசேர அந்த இடத்தில் உட்கார்ந்தவர் அப்படியே தூங்கியும்விட்டார்.
மறுகாலை கண் விழித்துப் பார்த்தால், அவருக்கு முன்னால் 20 பேரும் பின்னால் 200 பேரும் நின்று கொண்டிருந்தார்கள். அந்த சமயம் ஒருவர் அவரிடம் வந்து, ’தம்பி, நீ நிற்கும் இடத்தை தருவாயா, 2 ரூபாய் தருகிறேன்’ என்றார். எதுவும் புரியாத அவர் பணத்தை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார். அதுதான் அவரது முதல் வருமானம்.
அதன் பிறகுதான் அவருக்குத் தெரிந்தது, அது அமெரிக்கத் தூதரகம் என்று. இது நல்ல வேலையாக இருக்கிறதே என நினைத்த அவர், இப்படியே அங்கு வந்து செல்லும் பயண முகவர்களுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி விமான டிக்கெட்டின் விலை, விசா, பயணத் தேவைக்கான விபரங்கள் அனைத்தையும் தினமும் கற்றுக்கொண்டார். வரிசையில் நிற்கும் நேரத்தில் உடன் நிற்பவர்களுடன் பேச்சுக் கொடுத்து அவர்களுக்கு பயணச் சீட்டு வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பயணத் தேவைகளை பூர்த்தி செய்வது, விமான நிலையம்வரை அவர்களது பெட்டி படுக்கைகளை சுமந்து சென்று வழியனுப்புவது என்று பணிகளையும் செய்தார்.
இவரின் நேர்மையையும் – தொழில் பக்தியையும் ஆர்வத்தையும் கண்டு, கடன் கொடுக்க பல விமான பயண முகவர்கள் முன் வந்தனர். இதனையே மூலதனமாகக் கொண்டு 1986ல் ’டிராவல் சர்வீஸ்’ ஒன்றை தொடங்கினார். இன்று அந்த நிறுவனம் வருடத்துக்கு ரூ.12 கோடிக்கும் மேலான வர்த்தகத்தில் உயர்ந்து நிற்கிறது.
மிகச் சாதாரண நிலையில் இருந்து தனது நேர்மையான உழைப்பினால் உயர்ந்த அந்த மாமனிதர்தான் தொழில்அதிபர் வீ.கே.டீ. பாலன் அவர்கள். அந்த நிறுவனம் ‘மதுரா டிராவல்ஸ்’.
அவரின் ஜாதக சிறப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு.
கன்னி இராசி – தனுசு லக்கினத்தில் 26.01.1954-ல் பிறந்தவர். நான் ஏற்கனவே கூறியபடி, தைரியஸ்தானத்திற்குரிய சனி செவ்வாயோடு 11-ல் இணைந்துவிட்டது. தைரியத்திற்கு பஞ்சமா? அதுமட்டுமல்ல 5-க்குரியவன் செவ்வாய், பஞ்சமஸ்தானத்தை பார்வை செய்துவிட்டது. பூர்வ புண்ணியம் இங்கே வலுப்பெற்றுவிட்டது. கேட்க வேண்டுமா?
லக்கினதிபதி குரு, 6-ல் இருந்தாலும் மிருகசிரிஷம் செவ்வாய் சாரத்தில் அதாவது, 5-க்குரியவன் சாரத்தில் அமைந்து விட்டது. லக்கினாதிபதி ’பவர்’ அடைந்துவிட்டான்.
பவர் அடைந்த கிரகம், லக்கினாதிபதி குரு பகவான் ஆயிற்றே சும்மா இருக்குமா? பைசா பார்க்க ஆசைப்படும். புகழ் பெற ஆர்வம் பெறச் செய்யும். 6-ல் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை செய்து, ஆரம்பத்தில் நிம்மதியாக தூங்க கூட இடம் இல்லாத நிலையை தந்த லக்கினாதிபதி குரு, பிறகு வசதியான இல்லம், அற்புதமான வாழ்க்கை தந்துவிட்டான்.
பணம் கொடுத்தான், அருமையான இல்லமும் கொடுத்தான். மக்கள் மத்தியில் புகழ் கொடுத்தான் குரு. இதே குரு 6-ல் அமைந்து, 10-ல் இருக்கும் சந்திரனை பார்வை செய்தான். இதன் பலனாக உலகின் எல்லா நாடும் சுற்றி வரும் யோகத்தை தந்தான்.
ஏற்கனவெ கூறி இருக்கிறேன். ஒருவர் எந்த துறையிலும் புகழ் அடையவேண்டும் என்றால், பிரபலம் அடையவேண்டும் என்றால், அந்த ஜாதகருக்க 10-ம் இடம், 10-ம் அதிபதியான கிரகம் நன்றாக அமைந்து இருக்க வேண்டும்.
இவர் ஜாதகத்தில் 10-ல் சந்தினை அமர்ந்தான், அதே சந்திரனை குரு பார்த்து,’கெஜகேசரி யோகம்’ உண்டாக்கினான். ஆயிரம் சிங்கத்தை எதிர்த்த ஒரு யானை. இதுதான் கெஜகேசரி யோகம்.
அதாவது மலை போன்ற பிரச்சினைகள் வந்தாலும், அத்தனை பிரச்சனைகளையும் தவிடுபொடியாகிவிடும் யோகம் இது. திரு. சிவாஜி கணேசன் அவர்கள் பராசக்தி படத்தில் சொல்வாரே, ’ஒடினாள் ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ என்று அதுபோல, நண்பர் வீ.கே.டி.பாலனை உண்ண உணவு இன்றி, உடுத்த உடை இன்றி, உறங்க இடம் இன்றி வறுமை துரத்தினாலும் இவரின் அசராத உழைப்புக்கு ஜாதக சிறப்பும் துணை செய்து இவரை உயர்த்திவிட்டது.
இவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை. தனஸ்தானத்தில் புதன், சூரியன், சுக்கிரன், ராகு. 6-ல்குரு. 8-ல் கேது. 10-ல் சந்திரன். 11-ல் அதாவது லாபஸ்தானத்தில் செவ்வாய் – சனி இருவரும் இணைந்து ‘நல்ல சாரத்தில்‘இருப்பதால் அமோகமாக பெரும் யோகத்தை கொடுக்கிறார்கள். மறுபடியும் கூறுகிறேன். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. அத்துடன் உங்கள் ஜாதகமும் யோகத்தில் இருந்தால், ’மனிதா நீ சிகரத்தில் இருப்பாய்’. வாழ்த்துக்கள்.♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக