புதன், 21 மே, 2014

குருவே சரணம்

திருக்கணித பஞ்சாங்கப்படி 31.05.2013 அன்று குரு பெயர்ச்சி...
குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். ஸ்ரீதட்சணாமூர்த்திதான் குரு பகவான் என்று பலர் நினைக்கிறார்கள். 
சிவபெருமானான ஸ்ரீதட்சணாமூர்த்தி வேறு, நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் என்பவர் வேறு. சிவபெருமானான ஸ்ரீதட்சணாமூர்த்தி, குருபகவானுக்கும் குரு. கல்வி – ஞானத்திற்கும் குருவாக சிவபெருமான் இருக்கிறார்.
தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் சிவபெருமானை ஸ்ரீதட்சணாமூர்த்தியாக – குருவாக தேவர்கள் வணங்குகிறார்கள். ஆனாலும் குரு பெயர்ச்சி அன்று தேவர்களுக்கும் – நவகிரகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் பிரகஸ்பதி என்கிற குருபகவானை வணங்க வேண்டும்.
குரு பகவானுக்கே குருவாக இருக்கின்ற சிவபெருமானாகிய ஸ்ரீதட்சணாமூர்த்தியை குருவாக பாவித்து வணங்குவதில் தவறில்லை என்றாலும், ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை, அன்று பிறந்தநாள் காணும் நபருக்கு தானே சொல்வோம், அந்த நபரின் தாய்-தந்தைக்கா சொல்வோம்.?  அதுபோல, குரு பெயர்ச்சி அன்று குரு பகவானை வணங்குவது மேலும் நல்லது. ஒவ்வொரு கோயிலிலும் குருபகவான் நவகிரக சந்நதியில் அருள்பாலிக்கிறார். 
  
அங்கிரச முனிவருக்கு பிறந்த குருபகவான், கல்வியில் சிறப்பாக விளங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். சிவபெருமான் குருபகவானின் தவத்தை ஏற்று, நவகிரகங்களில் ஒருவராக திகழ ஆசி வழங்கினார். அத்துடன் சூரியபகவானுக்கு மேலான சக்திபடைத்தவராகவும் திகழ ஆசி வழங்கினார். அதுபோல, மங்களங்கள் யாவும் தரும் சக்தியையும் கொடுத்திருக்கிறார். ஆகவே சிவபெருமானின் சக்தியை பெற்ற பிரகஸ்பதி என்ற குருபகவானைதான் குருபெயர்ச்சி அன்று வணங்க வேண்டும். கெட்ட நேரமாக இருந்தாலும்,  குருபகவானின் அருள்பார்வை நம் மீது இருந்தால் நல்ல நேரமாக மாறும். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் இருக்கிறது.
அதில் ஒன்று இது – 
  
குரு பார்வை
ஒரு சிறந்த ஜோதிடர். அவர் தன் மகளின் ஜாதகத்தை கணித்தார். மகள் ஜாதகப்படி யார் அவளை திருமணம் செய்கிறார்களோ அந்த மணமகன் மறுநாளே இறந்துவிடுவான் என்பதை கணித்து அறிந்தார். தான் பெற்ற மகளாக இருந்தாலும் தன் மகளை திருமணம் செய்ய முன் வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி விடுவார் அந்த தந்தை.
பெண்ணின் தகப்பனாரே இப்படி கூறினால் யார் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வருவார்கள்.? இதனாலேயே அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்கவில்லை. ஒருநாள், மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை பார்த்து பிடித்துபோய், தங்கள் மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தனர்.
வழக்கமாக எல்லோரிடம் சொல்வதை போல பெண்ணின் தந்தையான ஜோதிடர், இந்த மாப்பிள்ளை வீட்டாரிடமும் தன் மகளின் ஜாதக இரகசியத்தை சொன்னார். இதை கேட்ட பிறகு, “தெரிந்தே நெருப்பில் விழுவதா?” என்று அதிர்ந்த மாப்பிள்ளை வீட்டார், அய்யா சாமீ… உங்கள் சகவாசமே வேண்டாம் என்று எழுந்துக் கொண்டனர். ஆனால் மாப்பிள்ளைக்கு அந்த பெண்ணை பிடித்துவிட்டது. தன் பெற்றோரை சமாதானப்படுத்தினான். திருமணம் செய்தால் இவளைதான் மணப்பேன் என்ற பிடிவாதம் பிடித்து அந்த பெண்ணையே திருமணம் செய்தான்.
மறுநாள் மாப்பிள்ளை இறப்பது நிச்சயம் என்ற முடிவுடன் மனதை தைரியப்படுத்திக் கொண்டார் ஜோதிடர். அந்த அளவில் ஜோதிடத்தில் வல்லவர் அவர். அதனால் எந்த நேரத்திலும் தன் மகள், அறையின் கதவை திறந்து கதறி கொண்டே வருவாள் என்று நினைத்து கொண்டே தூங்காமல் அறையின் கதவையே பார்த்து கொண்டே இருந்தார்.
ஆனால் மறுநாள் தன் மகள் மகிழ்ச்சியான முகத்துடன் கதவை திறந்து கொண்டு வந்ததை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் தந்தை. “ஜாதகம் பொய்யா… அல்லது நான் தவறாக கணித்து விட்டேனா..?“ என்று சந்தேகம் அடைந்து, தான் வணங்கும் விஷ்ணு பகவானை வேண்டி தன் சந்தேகத்தை கேட்டார்.
“நீ சராசரி மனிதன் அல்ல. நீ குரு பகவான். உன் மகளும் மருமகனும் தங்கிய அறை இருக்கும் திசையை கவலையுடன் பார்த்து கொண்டே இருந்ததால், உன் பார்வையின் சக்தியால் உன் மகளின் மாங்கல்யம் பலம் பெற்றது. குருவாகிய உன் பார்வைபட்டால் போதும் அதுவே கோடி புண்ணியம். மூங்கில் மரத்தின் அருகில் நெல்லை போட்டால் மூங்கில் மரம் பட்டுப்போகும். ஆனால் உன் பார்வைபட்டால் தோஷமான மாங்கல்ய பலம் கொண்டவர்களும் மங்கலகரமாக வாழ்வார்கள்“ என்றார் விஷ்ணுபகவான்.
அசுரர்களை வீழ்த்திய குரு   
தேவர்களுக்கும் – அசுரர்களுக்கும் தொடர்ந்து போர் நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் தேவர்கள் மனம் வருந்தி பிரம்மனிடம் சென்று, தங்களுடைய மனகவலையை சொன்னார்கள். “நீங்கள் குருபகவானை வணங்கி அவரை உங்கள் தலைவராக ஏற்றால், நிச்சயம் உங்களுக்கு அசுரர்களால் தொல்லை ஏற்படாது” என்றார் பிரம்ம தேவர். பிரம்மன் கூறியது போல, இந்திரனும் மற்ற தேவர்களும் குருபகவானை வணங்கி தங்களுடைய குருவாக ஏற்றார்கள். இதன் பிறகுதான் அசுரர்களை தேவர்களால் வீழ்த்த முடிந்தது.
திருமணயோகம் தரும் குரு  
ஒருவருக்கு திருமண பேச்சை எடுத்தாலே குருபிராப்தம் வந்ததா? என்று பெரியோர்கள் கேட்பார்கள். குரு பிராப்தம் இருப்பவர்களுக்குதான் விரைவில் திருமணம் நடக்கும். மாங்கல்ய பலம் கிடைக்கும். செல்வம் தேடி வரும். கல்வியில் சிறந்து விளங்குவர்.
மாங்கல்ய பாக்கியம் கிடைக்வும், குருவின் ஆசி ஆயுள் முழுவதும் கிடைக்க   வேண்டும் என்பதால்தான், பெண்கள் திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில், மஞ்சள் அல்லது இயற்கையாக மஞ்சள் நிறம் கொண்ட தங்கத்தை மாங்கல்யமாக செய்து அணிகிறார்கள்.  
உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் இருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சல் வஸ்திரம் அணிவிக்கலாம். இதனால் குருதோஷம் நீங்கும்.
திருமணம் தடைப்படுபவர்கள், ஏதாவது ஒருநாள் உங்களுக்கு சௌகர்யப்படும் நாளாக தேர்வு செய்து, அந்த நாள் வியாழகிழமையாக வருவதாக பார்த்து, குருபகவானை மனதால் நினைத்து புஷ்பராக ரத்தினத்தை குருவிரல் என்று சொல்லும் ஆள்காட்டிவிரலில் அணிந்து கொண்டு, தினமோ அல்லது வாரத்திற்கு ஒருநாள் வியாழகிழமையில் அந்த ரத்தினத்தை குரு பகவானாக பாவித்து பூஜை செய்து விரலில்  அணிந்துக்கொண்டால் விரைவில் திருமணம் கைக்கூடும்.
வியாழன்தோறும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி, நவகிரக சந்நதியில் உள்ள குரு பகவானை வணங்கி வருவதும் திருமண தடை அல்லது கல்வி தடைக்கு விசேஷ பரிகாரமாகும்.
குருபெயர்ச்சியன்று மஞ்சள் வாங்கினால் மங்கலகரமான சுபிட்சமான வருடமாக இந்த வருடம் முழுவதும் அமையும். மஞ்சள் நிறத்தில் உடை அணிந்தாலும் அல்லது நீங்கள் அணியும் உடையில் சிறு மஞ்சள் நிறம் கலந்து இருந்தாலும் யோகம் ஏற்படும்.
எப்படி சிகப்பு நிறத்தை கண்டால் துஷ்டசக்திகள் விலகுகிறதோ, விஞ்ஞான மருத்துவமும் அதிக நேரம் சிகப்பு வண்ணத்தை நோயாளியின் உடலில் பாய்ச்சி ரத்த ஓட்டம் சீராக செல்ல பயன்படுத்துகிறார்களோ அதுபோல், மஞ்சள் நிறத்திற்கும் வேறு பல நல்ல சக்திகள் இருக்கிறது. எந்த பிரச்னைகள் வந்தாலும் அதை முறியடித்து மங்கலகரமான வாழ்க்கையை கொடுக்கும் சக்தி குருபகவானுக்கு இருக்கிறது. இந்த பெயர்ச்சியில் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய குருபகவான் அருளட்டும்.
குருபிரம்மா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...