புதன், 21 மே, 2014

ஸ்ரீ காகபுஜண்டர்


ஸ்ரீ காகபுஜண்டர்

அண்டசராசரங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் 'உமாமகேஸ்வரன்' தன் சொருபமாக தன்னால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளாக விளங்கக் கூடிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலாக முப்பத்து முக்கோடி தேவர்கள் எண்பத்தி எண்ணாயிரம் முனிவர்கள், நவகோடி சித்தர்கள், கின்னர்கள், கிம்புருடர்கள், காந்தர்வர், சித்தவித்யாதரர், எட்சர், அட்டதிக்கு பாலகர்கள், எண்ணாயிரம் வகைகளைக் கொண்ட உயிரினங்கள் போன்றவர்களுக்கெல்லாம் முக்கால வழிகாட்டுதல்களைஸ் செய்வதற்காக சிரஞ்சிவிஸ் சித்தராக ஸ்ரீ காகபுஜண்டரை இவ்வுலகில் படைத்தார்.
அண்டத்தின் இயக்ககங்களை நிர்ணயித்து, மும்மூர்த்திகள் முதலான அனைத்து தேவர்களின் எதிர்காலங்களையும் அறிந்து உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உரைத்து வழிகாட்டும் பொறுப்பையும் 'உமாமகேஸ்வரன்' காகபுஜண்டரிடத்திலே ஒப்படைத்துள்ளார். உலகத்தின் தெய்வீக சூட்சுமங்கள் குறித்து தேவசபையில் எழும் சந்தேககங்களுக்கு நிர்ணயமான உண்மை விளக்கங்களைக் கொடுத்து இவ்வுலகோர்க்கு வழிகாட்டக் கூடிய ஆற்றல் வாய்ந்த கடமைகளையும் செய்யுமாறு 'பரமேஸ்வரன்' காகபுஜண்டரை பணித்தார்.
உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து தேவரகசியங்களையும் பாதுகாத்து வைக்கும் படியான பொறுப்பையும் காகபுஜண்டரிடத்திலே ஒப்படைத்தார். அறுபத்தி நான்கு தெய்வீகக் கலைகளின் முழுசூட்சுமங்களையும் தன் ஆத்மாவில் பதிந்து கொண்டு உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்கிற அருளாணையும் இறைவனால் காகபுஜண்டருக்கு வழங்கப்பட்டது. பலகோடி ஆண்டுகளாய் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள்குரு காகபுஜண்டர் தன்வழி வந்த பலகோடி சித்தர்களுக்கு பலகோடி தேவரகசியங்களை உபதேசித்துள்ளார். அவற்றுள் கொல்லிமலை கோரக்கச் சித்தருக்கு உபதேசம் செய்த தேவரகசியத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய பூரண வரலாற்றையும் காகபுஜண்டர் தானாகவே சுருக்கமாகக் கூறியிருக்கின்றார்.


காகபுஜண்டரின் தெய்வீக வரலாறு - கோரக்கச்சீடரின் பெருமை
அறம்பாடியம்மையை தன் இடப்பாகத்தில் சுமந்து கொண்டு சித்தர்களுக்கெல்லாம் அருள் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இறைவன் அறப்பள்ளியீஸ்வரன் ஆட்சி செய்யும் பெருமையும் அருள்சித்தர்கள் பலர் ஜீவ நிலையில் குருவருள் கொடுத்துக் கொண்டிருக்கும் மகாபெருமையும் பெற்றதொரு திருப்தியாம் கொல்லிமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனதருமை சீடனாகிய கோரக்கனே! அருளன்புடன் கேட்பாயாக உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் மேலான குருவால் ஆட்கொள்ளப்பட்டு இம்மை மறுமை வினைகளை நீக்கி வீடுபேறு பெறவேண்டும் என்பதற்காக இவ்வுலகத்தின் ஆதிகுருவாக படைக்கப்பட்ட என்னுடைய திவ்விய சரிதத்தை மிக சுருக்கமாக சொல்லுகிறேன், அன்புடன் கேட்பாயாக' என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடருக்கு தன் தெய்வீக வரலாற்றை சொல்ல ஆரம்பிக்கின்றார்.


மும்மூர்த்திகள் தோற்றம்:
ஆதியிலே உலகத்தின் ஆதிசக்தியாக விளங்கக்கூடிய ஆதிபராசக்தியானவள் தன் சக்தியை ஆள்வதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளைப் படைத்தாள். மும்மூர்த்திகளையும் இயங்குவதற்காக தன் சக்தியின் ரூபமாக சரஸ்வதி, லட்சுமி, ஈஸ்வரி என்னும் மூன்று சக்திகளைப் படைத்தாள். பிரம்மாவிற்கு சரஸ்வதியையும், விஷ்ணுவிற்கு லட்சுமியையும், சிவனுக்கு ஈஸ்வரியையும் மணம் செய்வித்தாள். பிரம்மாவிற்கு படைக்கும் தொழிலையும் கொடுத்து, மும்மூர்த்திகளும் தத்தம்தேவிகளோடு சேர்ந்து இவ்வுலகை ஆளவேண்டுமாய் கட்டளையிட்டாள். மும்மூர்த்திகளுக்கும் தலைவனாய் முக்கண் படைத்த சிவபெருமானை தன்னுடைய ரூபமாகிய பார்வதியுடன் கூடி இவ்வுலகை ஆளப்பணித்தாள்.


சரஸ்வதியின் தவம்:
மும்மூர்த்திகளின் தொழிலுக்கெல்லாம் ஆதியான தொழிலாக விலங்கக்கூடிய படைக்கும் தொழிலை ஏற்றுக் கொண்ட பிரம்மன் தன் மனைவியான சரஸ்வதியுடன் கூடி தான் எப்படி இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதற்குண்டான உயிர்களையும் அவர்களை ஆள்வதற்கான தேவர்களையும் படைக்கப் போகிறேன்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே! எனக்கு யாராவது வழிகாட்ட வேண்டும்! நான் எப்படி அந்த வழிகாட்டுதலைப் பெறுவேன்? என்று பல சந்தேகங்களைக் கிளப்பி தன் மனைவியான சரஸ்வதியிடம் முறையிட்டான். தன் கணவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட கலைவாணி முத்தொழில்களுக்கும் தலைவனாக விளங்கக்கூடிய உமாமகேஸ்வரனைத் துதித்து கடும் தவம் இயற்றினார். தவத்திற்கு மெச்சிய இறைவன் தன் மனைவி உமாமகேஸ்வரியோடு கலைவாணிக்கு காட்சிக் கொடுத்து, "அம்மையே! உம் தவத்திற்கு மெச்சினோம்! உன் கணவன் பிரம்மன் தன் தொழிலை நல்ல முறையில் செய்வதற்கு வழிகாட்டுதற்காக சிரஞ்சீவியாக உலகத்தின் ஆதிகுருவாக விளங்கக்கூடிய ஓர் ஞான குழந்தையை உமக்கு அளிக்கிறேன்! பெற்றுக் கொள்! என்று சொல்லி தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கதிர்வீச்சினை சரஸ்வதின் மடியின் மீது செலுத்தினார் உமாமகேஸ்வரன்.


காகபுஜண்டர் தோற்றம்:
பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு; தன் வலப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ் நோக்கியவாறு நான்கு கைகளும், அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும், கீழ் நோக்கியவாறு நான்கு கைகளுமாக கொண்டு; தன்னுடைய பதினாறு திருக்கங்களிலும் சிரஞ்சீவி காப்புகள் அணிந்து கொண்டு, பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு, நெற்றிக் கண்ணுடன் கலைவாணியின் மடியின் மீது காகபுஜண்டராகிய நான் அவதரித்தேன்.
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து ஆசிர்வதித்து, உலகத்த்தின் ஆதிகுருவாகிய காகபுஜண்டரென்னும் ஞானக்குழந்தையாகிய எம்மை வணங்கினார்கள். என்னுடைய உடலின் வலபாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞான ஒளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் வலபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, காகம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடப்பாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், செந்நாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல் (ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை, யோகத்தண்டு போன்றவைகள் அமைந்திருந்தது.


பிரம்மனின் படைப்புத் தொழில் ஆரம்பம்:
நான், என் பிறப்பிற்குக் காரணமான என் தாய், தந்தையரான சரஸ்வதியையும் பிரம்மதேவனையும் வணங்கி அவர்களின் ஆசிபெற்றேன். எம்முடைய தோற்றத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டு என் பெற்றோர் பூரிப்படைந்தனர். நான், என் தந்தை பிரம்மதேவனுக்கு உலகின் படைப்பு ரகசியங்களை உபதேசம் செய்தேன். என் அன்பு உபதேசங்களை ஏற்றுக் கொண்டு என் தந்தை பிரம்மதேவன் தேவர்கள் முதலான அனைத்து உயிரனங்களையும் இவ்வுலகில் படைத்து பெருமகிழ்வெய்தினார்.


கற்பகவிருட்சத்தில் காகபுஜண்டர்:
நான் என் கரத்திலமர்ந்த காமதேனுவை நோக்கினேன், அவள் கற்பகவிருட்சமரத்தை உண்டு பண்ணி அதன் மீதமர்ந்து இவ்வுலகிற்கு வழிகாட்ட வேண்டுமாய் எம்மை வேண்டினாள். காமதேனுவின் விருப்பப்படி அந்தநாள் முதல் கற்பகத்தருவின் மீதமர்ந்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள நைத்து உயிரனங்களுக்கும் நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன். மும்மூர்த்திகளூக்கும் ஏற்படக்கூடிய சந்தகங்களைத் தெளிவித்துக் கொண்டு இவ்வுலகின் ஆதிகுருவாக இவ்வுலகை நான் அருளாட்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்தி எண்ணாயிரம் முனிவர்களும், கின்னர்களும், கிம்புருடர்களும், சித்தவித்யாதரர்களூம், அட்டவசுக்களும், அட்டதிக்கு பாலகர்களும், நவகிரகங்களும், காவல் தெய்வங்களும், பஞ்சபூதங்களும், மற்றும் பலகோடி சித்தர்களும் என்னிடம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உலகங்களில் பலமுறை உபதேசம் பெற்றிருக்கிறார்கள். பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் இவ்வுலகிற்கு வழிகாட்டிக் கொண்டு நான் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு வருகிறேன்.
யுகாந்திர தர்மங்கள், வேதங்கள், மந்திரங்கள், சாஸ்திரங்கள், ஞானதத்துவங்கள், அறுபத்து நான்கு கலைகள், தேவபுராணங்கள் போன்ற அனைத்து கல்விகளும் சரஸ்வதியின் அன்புடன் இவ்வுலகிற்கு எம்மால் உணர்த்தப்பட்டவையே. அண்டசராசரங்களின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால இயக்கங்கள் அனைத்தையும் நானறிவேன்.


சம்புகமுனிவரின் தவம்:
ஒரு சதுர்யுகக் காலம் நான் இவ்வுலகில் வாழ்ந்து வழிகாட்டிய பிறகு அடுத்த சதுர்யுகம் ஆரம்பித்தது. இரண்டாவது சதுர்யுகத்தில் வீரத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகோர் வாழவும் அதர்மம் அழியவும் வேண்டி கயிலாயத்திலே உமாமகேஸ்வரன் தன்னுடைய தேவியோடு கமலாச்சிதேவியுடனாய சம்புகமுனிவருக்கு காட்சி கொடுத்து, "தவப்புத்திரரே! உமது தவத்திற்கு மெச்சினோம்! உமது எண்ணம் ஈடேறி இவ்வுலகில் தர்ம்மானது சிரஞ்சீவியாக நிலைத்து ஓங்கி வாழ்வதற்காக சிரஞ்சீவியாக ஒரு ஞானக் குழந்தையை உமக்கு அளிக்கிறேன். இக்குழந்தைக்கு பகுளாதேவி என்று பெயரிட்டு யாம் முன்னரே நியமித்தபடி சரஸ்வதியின் அன்பு புத்திரனாக சிரஞ்சீவியாக வாழக்கூடிய காகபுஜண்டருக்கு மணம் முடித்து உங்கள் இச்சையை தீர்த்துக் கொள்வீர்களாக! " என்று கட்டளையிட்டார். உமாமகேஸ்வரி தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கதிர்வீச்சினை கமலாச்சியின் மடியின் மீது செலுத்தினாள்.


பகுளாதேவி தோற்றம்:
பல ஆயிரம் சந்திரர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு, காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் நவரத்தின மணிகளை அணிந்து கொண்டு; தன் வலபாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ்நோக்கியவாறு நான்கு கைகளும் அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும்; கீழ்நோக்கியவாறு நான்கு கைகளுமாக பதினாறு திருக்கரங்களைக் கொண்டு; தன்னுடைய பதினாறு திருகரங்களிலும் சிரஞ்சீவிக் காப்புகள் அணிந்து கொண்டு; பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு நெற்றிக் கண்ணுடன் கமலாச்சி தேவியின் மடியின் மீது பகுளாதேவி திருஅவதாரம் செய்தாள்.
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து பகுளாதேவியை ஆசீர்வதித்தார்கள். உலகத்தின் ஆதி குருபத்தினியாகவும் தர்மசொரூபினியாகவும் விளங்கக் கூடிய ஞானசக்தியாக பகுளாதேவியை முமூர்த்திகளும் வணங்கினார்கள். பகுளாதேவியின் உடலின் வலபாகத்தில் மேல் நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், கருநாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவியின் உடலின் வலப்பாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல்(ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை யோகத்தண்டு போன்றவைகள் அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞானவொளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவியின் உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, அன்னம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவி தன் தாய் தந்தையரான சம்புகமுனிவரையும் கமலாச்சி தேவியையும் வணங்கினாள். சம்புக முனிவர் தன் மனைவி கமலாச்சி தேவியோடு தன் ஞானமகளை ஆசீர்வதித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பகுளாதேவி தன் தந்தையாருக்கு அதர்மத்தை அழிக்கும் உபாயங்களையும் வீரதத்துவத்தின் சூட்சுமங்களையும் உபதேசித்துக் கொண்டு நாளொடு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரலானாள்.
காகபுஜண்டர் - பகுளாதேவி திருமணம்:
ஒருநாள் என் தாய் சரஸ்வதி தேவியானவள் எனக்குத் திருமணம் செய்ய ஆவல்கொண்டு அதற்கான மார்கங்களையும் எம்மிடமே கேட்டாள். நான் ஞானத்தின் வழியாக எமக்கென்று இறைவனால் சம்புகமுனிவருக்கு பகுளாதேவி மகளாகப் பிறந்திருப்பதையும் அவளை மணந்து கொள்ளும் காலத்தையும் என் தாயாருக்கு உணர்த்தினேன். என் தாய் சரஸ்வதி தேவியானவள் முமூர்த்திகளையும், மூன்று வேதியர்களையும் அழைத்துக் கொண்டு கயிலாயத்தில் ' சம்புகிரி ' என்னும் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்புகமுனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்கள்.
தேவர்கள் புடைசூழ வந்த கலைமகளை கமலாச்சிதேவியும் சம்புகமுனிவரும் வணங்கி வரவேற்று உபசரித்தார்கள். முமூர்த்திகளுள் ஒருவராகிய மகாவிஷ்ணு தாங்கள் வந்ததின் நோக்கத்தை சம்புகமுனிவருக்கு தெளிவுபடுத்த சம்புகமுனிவரும் அதற்கு இயைந்து எனக்கும் பகுளாதேவிக்கும் திருமணம் நிச்சயித்தார்கள். மகரத் திங்கள் (தைத்திங்கள்) பூச நட்சத்திரம், மீனலக்கினம், சுக்கிர வாரம், பஞ்சமி திதி கூடிய சுபயோக சுபதினத்தில் மகேஸ்வரன் அரசாட்சி செய்யும் திருக்கயிலை தேவசபையில் எங்கள் திருமணம் நடந்தது. தேவர்களனைவரும் வருகை தந்து எங்களை ஆசீர்வதித்து எங்களையும் வணங்கி எங்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுச் சென்றார்கள். என் தாய் கலைவாணியே வேதியராக அமர்ந்து யாகங்கள் முதலான அனைத்து சடங்குகளையும் செய்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.


ஆதிகுருவாக பகுளாதேவியுடன் காகபுஜண்டர்:
உமாமகேஸ்வரனும் உமாமகேஸ்வரியும் எங்கள் இருவரையும் அணைத்து இருவரின் நெற்றிக் கண்ணிலும் முத்தமிட்டு சிவசக்திகலைகளை ஆசீர்வதிதார்கள். அன்று முதல் என் தேவி பகுளாதேவி என் வலபாகத்தில் அமர்த்திக் கொண்டு கற்பகவிருட்சத்தின் மேலமர்ந்து இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றேன்.
Sre Kagabujandar With His Consort Sre Baguladevi
இவ்வுலக உயிர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். பலகோடி ஆண்டுகள் கடந்த என் வாழ் நாட்களில் பல தவங்களுக்குச் சென்று நான் என் தேவியோடு அருள்காட்சிகள் கொடுத்திருக்கின்றேன். ஒரே நேரத்தில் பல்லாயிரம் உயிர்களுக்கு வெவ்வெறு உலகங்களில் வெவ்வெறு இடங்களில் வெவ்வெறு ரூபங்களில் வழிகாட்டும் தெய்வீக சக்தியை படைத்தவன் நான். என்னை வழிபாடு செய்பவர்களுக்கு இவ்வுலகின் அனைத்து சூட்சுமங்களையும் உணர்த்தி பிறப்பின் எல்லா பயங்களையும் பெறும்படியாக ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு உயிர் தானெடுக்கும் ஏதாவதொரு பிறவியில் எம்மை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுவிட்டால் அவ்வுயிருக்கு கற்பக விருட்சமாக ஞானங்களை வழங்கி அவ்வுயிரைக் கரையேற்றஸ் செய்யும் உலகத்தின் ஆதிகுரு நானேயாவேன். நான் அகாரபீடத்தில் அமர்ந்து கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருக்கின்றேன். அகரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துக்கள் வாழ்வதைப்போல் அகாரபீடத்தைக் கொண்ட என் குருவருளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலக உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, உலகத்தின் ஆதிகுரு நானேயாவேன்.                                                                                                                    காகபுஜண்டர் முமூர்த்திகளுக்கு உபதேசித்தல்:
மகாபிரளயங்கள் வரும் பொழுது முமூர்த்திகளுள் இருவர்களாகிய பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவர்களும் சிவனின் மகாபிரளய அவதாரமாக விளங்கக் கூடிய காயாரோகணீஸ்வரனிடத்தில் ஒடுங்குவார்கள். மகாபிரளயம் முடிந்தபிறகு கிருதயுகம் ஆரம்பித்தவுடன் ஒடுக்கத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு போன்ற இருமூர்த்திகளும் மகாசிவத்திலிருந்து பிறப்பார்கள். மீண்டும் மூன்று மூர்த்திகளும் மூன்று தேவியர்களும் தாங்கள் இவ்வுலகில் ஆற்றவேண்டிய கடமைகளை அறிந்து கொள்வதாற்காக கைலாயத்தில் தேவசபையைக் கூட்டி மகாசிவனின் உத்திரவுப்படி எம்மை அழைப்பார்கள். இவ்வுலகில் முமூர்த்திகளும் அவர்களது தேவியர்களும் ஆற்றவேண்டிய கடமைகளையும் அவர்களின் முற்பிறப்பு உண்மைகளையும் நான் என் மனைவியோடு சேர்ந்து மும்மூர்த்திகளுக்கு உபதேசிப்பேன்.
நான் உபதேசம் செய்கின்றபொழுது மும்மூர்த்திகளும் என்னை வணங்கி என்னை குருபீடத்தில் அமரச்செய்து அன்பின் மிகுதியால் எம்பீடத்திற்கு கீழான பீடத்திலமர்ந்து கொண்டு என் உபதேசதைக் கேட்பார்கள். எம்முடைய உபதேசத்தை பிரம்மாவானவர் பிரம்மபாலன் சொரூபத்திலும், விஷ்ணுவானவர் கோபாலன் சொரூபத்திலும், சிவனானவர் பைரவபாலன் சொரூபத்திலும் கேட்டு இன்புருவார்கள்.
மும்மூர்த்திகளுக்கும் நான் உபதேசம் செய்த பிறகு இவ்வுலகில் பிரம்மாவானவர் தேவர்கள் முதலான அனைத்து உயிர்களையும் படைப்பார். பிரம்மனின் படைப்பை பிரம்மாவோடு சேர்ந்து விஷ்ணுவும் சிவனும் ஆட்சி கொள்வார்கள்.
Lord KrishnamurthiLord Thatchanaamurthi
தேவர்களூக்கெல்லாம் பிரம்மாவானவர் தன் உபதேச சொரூபமாகிய வேதமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்றபொழுது அவர்கீழமர்ந்து அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். வைகுண்டத்தில் திருமால் ஆளுகையின் கீழமர்ந்த அனைத்து தேவர்களுக்கெல்லாம் விஷ்ணுவானவர் தன் உபதேச சொரூபமாகிய கிருஷ்ணமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்ற பொழுது அவர்கீழமர்ந்து வைகுண்டவாசம் செய்யும் அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். கைலாயத்தில் மகாசிவனின் ஆளுகையின் கீழ் அமைந்த தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களுக்கெல்லாம் மகாசிவன் தன்னுடைய உபதேச சொரூபமாகிய தட்சணாமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசம் செய்கின்றபொழுது அவர்கீழ் அமர்ந்து அனைத்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களையெல்லாம் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயங்களைச் செய்வார்கள்.
இவ்வாறாக பிரம்மனருளால் தேவர்களால் படைக்கப்படும் அனைத்து சிறு தேவர்களும் அவர்களின் படைப்புக்குக் காரணமான தேவர்கள் மூலம் அதற்குத் தொடர்புடைய மூன்று உபதேச சொரூபங்களாக விளங்கக்கூடிய வேதமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் தட்சணாமூர்த்தி போன்ற ஏதாவதொரு குருசொரூபம் மூலம் குரு உபதேசம் கொடுக்கப்பட்டு இவ்வுலகம் ஆட்சி செய்யப்படுகிறது.
ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் ஜீவராசிகளுக்கும் அவ்வாறாகவே அவ்வுயிர்களின் படைப்புக் காரணத் தொடர்புடைய குருசொரூபத்தால் குரு உபதேசம் செய்யப்படுகிறது. ஒரு சதுர்யுகத்தில் முதலாவதாக வரும் கிருதாயுகத்தில் ஊழ்வினை விலக்கு அளிக்கப்பட்டு எல்லா உயிர்களுக்கும் பூரண சுதந்திரம் அளிக்கப்படுகின்றது. தர்மத்தை வழுவாமல் தேவர்களும் மற்ற உயிர்களும் வாழ்வதற்கு அனைத்து வசதிகளும் இன்பங்களும் இறைவனால் அளிக்கப்பட்டு பதினான்கு லோகங்களையும் உள்ளடக்கிய இவ்வுலகம் ஆளப்படுகிறது. கிருதாயுகத்தில் கடைசியாகப் பெற்ற பிறவியில் செய்கின்ற பாவங்கள் மட்டும் அவ்வுயிர்களின் வினையேட்டில் பதிக்கப்படுகிறது.
கிருதாயுகம் முடிந்து திரேதாயுகம் ஆரம்பித்த பிறகு முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிறவி தரப்படுகின்றது. வினையின் அடிப்படையில் அமைந்த அப்பிறவி முதல் கலியுகம் முடிகின்ற வரை அவ்வுயிர் செய்கின்ற நல்வினை மற்றும் தீவினைகளை அடிப்படையாகக் கொண்டே உயர்வும் தாழ்வும் இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. வினைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு உயிரும் தனக்கென்று பிரத்யேக தேவர்களையும், முனிவர்களையும் சித்தர்களையும் வழிபாடு செய்கின்ற பொழுது அந்தந்த தேவர்களாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் அந்தந்த உயிர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உபதேசம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரின் வினையின் வீரியத்தை அடிப்படையாகக் கொண்டு உபதேசத்தின் நிலைகளும் மாற்றம் பெறுகின்றது. எந்த அளவிற்கு ஓர் உயிர் நல்வினையைக் கொண்டுள்ளதோ அந்த அளவிற்கு உயர்நிலை ஞானங்களையும் உபதேசங்களையும் அந்த உயிரால் பெறப்படுகிறது. இவ்வாறாகவே அனைத்து முனிவர்களும், தேவர்களும், சித்தர்களும், அவரவர்களை வணங்குபவர்களுக்கு உரிய உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். இவ்வாறாகவே எம்மை வழிபடுவோர்களுக்கும் உலகத்தின் மூலகுருவாகிய நானும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம் வழிவந்த சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு வருகிறேன்.


காகபுஜண்டர் சகல உயிர்களுக்கும் உபதேசித்தல்:

பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் எம் வழிவந்த கோடான கோடி தேவபுருடர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், மிருகங்கள், பறவைகள், பாம்புகள் முதலான ஒன்று முதல் ஆறு அறிவு வரை படைத்த அனைத்து உயிர்களுக்கும் நான் இதுவரை உபதேசம் செய்துள்ளேன், தொடர்ந்து உபதேசங்களை செய்துகொண்டும் இருக்கின்றேன். பல கற்ப காலங்கள் கடந்த எம் வாழ்க்கையில் பல கோடி விசித்திரங்களை நான் இவ்வுலகின் பார்த்திருக்கிறேன். பூலோகம் மட்டுமன்றி பிற பதிமூன்று லோகங்களிலும் பலகோடி தேவ இன உயிர்களுக்கும் நான் உபதேசம் செய்திருக்கின்றேன். ஈரேழு பதினான்கு லோகங்களிலும் என் அரசாட்சி பல கோடியுகங்களாய் குறைவின்றி நடந்து வருகின்றது. கிருதா யுகத்தில் "தேவமதம்" என்னும் பொதுப் பெயரால் ஒரேயொரு மதம் மட்டும் வாழ்ந்து தர்மம் தழைத்தோங்கும் உயர்நிலைக் கொண்டு பதினான்கு உலகங்களும் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கின்றேன். துவாபரா யுகத்தில் ஒன்பதாயிரம் மத பேதங்களைக் கொண்டு இவ்வுலகம் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். கலியுகத்தில் பதினெட்டாயிரம் மதபேதங்களை கொண்டு இவ்வுலகம் வாழ்வதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். வெவ்வேறு சதுர்யுகங்களிலும் வெவ்வேறு வேற்றுமைகளைக் கொண்ட ஒரே ஒற்றுமை மூலங்களைக் கொண்டு தேவர்களும், சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் வகை ஜீவராசிகளும், இறை அவதாரங்களும், புராணங்களும், தத்துவங்களும், வேதங்களும், கலைகளும் இவ்வுலகில் தோன்றுவதும் இறுதியில் மறைவதும் மீண்டும் தோன்றுவதுமாகிய சுழற்சி விளையாட்டுக்கள் இவ்வுலகில் நிகழ்வதை நான் பலகோடி ஆண்டுகளாய் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு தேவபுருடர்களையும் அடுத்தடுத்த பிறவிகளில் கண்டு அவர்க்ளை ஆசீர்வதித்து அவர்களுக்கு இது எத்தனையாவது பிறவி என்ற விவரத்தை சொல்லி அவர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறேன். எல்லா யுகங்களிலும், எல்லா லோகங்களிலும், எல்லா வடிவங்களிலும் நான் ஆதிகுருவாக அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன்.


காகபுஜண்டரின் பதினாறு திருப்பெயர்கள்:

உலகத்தின் ஆதிகுருவாகிய எனக்கு பதினாறு திருப்பெயர்கள் உண்டு. அவையாவன.
1. காகபுஜண்டன்
2. நாகபுஜண்டன்.
3. யோகபுஜண்டன்.
4. புஜங்கன்.
5. புஜண்டி
6. காக்கையன்.
7. நாகேந்திரமுனி.
8. மனுவாக்கியன்.
9. காலாமிர்தன்.
10. சஞ்சீவிமுனி.
11. அஞ்சனாமூர்த்தி.
12. கற்பகவிருட்சன்.
13. நற்பவி.
14. பிரம்மகுரு.
15. ஆதிசித்தர்.
16. திரிகாலஜெயர்..
காக்கையை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு காகபுஜண்டர் எனப் பெயருண்டு. நாகத்தை கரத்தில் தாங்கியுள்ளதால் எனக்கு நாகபுஜண்டன் என்கிற பெயருண்டு. யோகதண்டத்தை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு யோகபுஜண்டன் என்கிற பெயருண்டு. கரங்களில் பல அங்கங்களையும் கொண்டுள்ளதால் எனக்கு புஜங்கன் என் கிற பெயருண்டு. கரத்தை அண்டியவர்களுக்கெல்லாம் உபதேசித்தருள்வதால் எனக்கு புஜண்டி என் கிற பெயருண்டு. பலகோடி ரூபங்களை நான் எடுத்தாலும் எனக்கு பிடித்தமான ரூபமாக காக்கை ரூபத்தை கருதுவதால் எனக்கு காக்கையன் என் கிற பெயருண்டு. நாகேந்திரனை தலைவராகக் கொண்ட நாகலோகத்தில் வாழும் நாகங்களுக்கெல்லாம் குருமுனிவராகத் திகழ்வதால் எனக்கு நாகேந்திரமுனி என் கிற பெயருண்டு. உலகத்தின் உயர்ந்த நீதியாக விளங்கக்கூடிய மனுநீதியை உபதேசிப்பதால் எனக்கு மனுவாக்கியன் என்கிற பெயருண்டு. முக்கால ரகசியங்களையும் உணர்ந்து அதன் அமிர்தங்களை இவ்வுலகிற்கு உபதேசித்தால் எனக்கு காலாமிர்தன் என்கிற பெயருண்டு. என்றும் அழியாத சிரஞ்சீவியாக நான் வாழ்ந்து வருவதால் எனக்கு சிரஞ்சீவிமுனி என்கிற பெயருண்டு. முக்காலத்தையும் பூரணமாக உணர்ந்து முக்கால அஞ்சனமாக விளங்குவதாலும், எம்முடைய கரத்தில் அஞ்சனம் கொண்டிருப்பதாலும் எனக்கு அஞ்சனாமூர்த்தி என் கிற பெயருண்டு. கற்பகவிருட்சத்தின் மீது அமர்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் அளவற்ற ஞானத்தை நான் உபதேசித்துக் கொண்டிருப்பதாலும், என் ஞான உபதேசத்தைப் பெறுபவர்கள் கற்பகவிருட்சமாக எல்லா வளங்களையும் கொண்டு விளங்குவதாலும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கும் எனக்கு கற்பகவிருட்சன் என்கிற பெயருண்டு. உலகமெல்லாம் நன்மையே விளைய வேண்டும் என்கிற உயர் நோக்கம் கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருப்பதால் எனக்கு நற்பவி என்கிற பெயருண்டு. பரபிரம்ம தத்துவமாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அருளுபதேசம் செய்வதால் எனக்கு பிரம்மகுரு என்னும் பெயருண்டு. சித்தர்களுக்கெல்லாம் முதல் சித்தனாக இவ்வுலகில் தோன்றி எல்லா சித்தர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டு அவர்களை அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு ஆதிசித்தர் என்கிற பெயருண்டு. முக்காலங்களையும் வென்று பலகோடி ஆண்டுகளாய் வெற்றியோடு சிரஞ்சீவியாக இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு திரிகாலஜெயர் என்கிற பெயருண்டு. இவையன்றியும் இவ்வுலகோர் பல்வேறு குருசொரூபங்களில் எம்மை வணங்கி என்னருள் பெற்று வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.


காகபுஜண்டரின் பதினாறு திருக்கரங்களின் அருளாட்சி:

நான் என்னுடைய பதினாறு திருக்கரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன். சூலாயுத கரத்தால் உலக உயிர்களை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன். எழுத்தாணி கரத்தால் உலகதோருக்கு அவர்களின் நாவில் ஞானத்தை எழுதுகிறேன். ஞானஒளி கரத்தால் உலகோர்களுக்கு ஞானஒளியைப் பாய்ச்சி ஆசீர்வதிக்கிறேன். அபய கரத்தால் உலகோர்களுக்கு அபயமளிக்கிறேன். காமதேனு கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு எல்லா செல்வங்களையும் குறைவின்றி காமதேனு மூலம் பெற்றுத் தருகிறேன். வீணை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அறுபத்திநான்கு தெய்வீகக் கலைகளையும் உபதேசித்தருள்கிறேன். காகத்தைக் கொண்ட கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அன்பு தத்துவத்தையும் ஒற்றுமை தத்துவத்தையும் உபதேசித்தருள்கிறேன். அஞ்சனம் கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு முக்கால ரகசியங்களை உணரும் தெய்வீகத்தை உபதேசித்தருள்கிறேன். வேலாயுத கரத்தால் உலகோர்களுக்கு வெற்றி ஆசீர்வாதங்களை வழங்குகின்றேன். தண்டாயுத கரத்தால் குருவருளுக்குக் கலங்கம் ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனைகள் வழங்குகின்றேன். வரத கரத்தால் உலகோர்களுக்கு வரம் அளிக்கின்றேன். செந்நாகம் கொண்ட கரத்தால் உலகோர்களுக்கு ஊழ்வினை நீக்கி ஞானத்தை அருள்கிறேன். சுருதி (ஓலைச்சுவடி) கரத்தால் உலகோர்களுக்கு அனைத்து கல்வியையும் அருளுகின்றேன். அமிர்தகலச கரத்தால் உலகோர்களுக்கு அமிர்தத்தை கொடுத்து அவ்வுயிர்களின் ஆயுளை உயர்த்துகிறேன். அட்ட சித்தி முத்திரை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அட்டமாசித்திகளையும் வழங்குகின்றேன். யோகத்தண்டு கரத்தின் மூலம் உலகோர்களுக்கு பூரண யோகமார்க்கத்தை உபதேசித்தருள்கிறேன்.
இவ்வாறாகவே, என் வலபாகத்திலே சக்திரூபமாக என் மனைவி பகுளாதேவி சுமந்து கொண்டு இவ்வுலகில் தெய்வீக அருளாட்சிகள் செய்து கொண்டு வருகிறேன். எம்போன்ற எங்களிருவருக்கும் அமைந்த ஒத்த திருக்கரங்களான பதினான்கு திருக்கரங்களைத் தவிர்த்து என் மனைவிக்கு வேறுபட்டிருக்கும் அன்னம் கொண்ட திருக்கரத்தின் மூலம் தாய்மை அன்பையும், கரும்பாம்பு கொண்ட திருக்கரத்தின் மூலம் மோட்சத்தையும் உலகோர்களுக்கு என் மனைவி வழங்கியருள்கிறாள். நானும், என் மனைவியும் சிவசக்தி ரூபத்தில் அதாவது தந்தை தாய் ரூபத்தில் (இடப்பாகம் தந்தையாகவும் வலபாகம் தாயாகவும்) இவ்வுலகில் குருவருளாட்சி செய்து கொண்டு வருகிறோம். தந்தை தாய் ரூபமான எம் குருவருளன்றி பேரருளை முழுமையாக பெறுகின்ற பாக்கியம் உலகோர்களுக்கு கிட்டாது. என்பது பேருண்மை. என், அன்பு சீடனாகிய கோரக்கனே! யான் இதுவரை சொல்லியருளிய எம் தெய்வீக வரலாற்றை நீர் மிகப்பணிவுடன் கேட்டபடியினால் பகுளாதேவி உடனுறை காகபுஜண்டனாகிய எம் வற்றாத பதினாறு குருவருட்பேறுகளும் உமக்குக் குறைவின்றி கிடைக்க ஆசீர்வதிக்கின்றோம். நற்பவி!


காகபுஜண்டரின் மூலமந்திரங்கள்:

காகபுஜண்டரின் மூலமந்திரங்கள் இரண்டு வகைகளாகக் கொண்டதாகும். அவையாவன : கர்மசித்தி மூலமந்திரம் மற்றும் ஞானசித்தி மூலமந்திரம் என்பனவாகும். உலக இன்பங்களைப் பெறுவதற்கு கர்ம சித்தி மூலமந்திரமும், ஞான இன்பங்களைப் பெறுவதற்கு ஞான சித்தி மூலமந்திரமும் பயன்படும்.


காகபுஜண்டரின் கர்மசித்தி மூலமந்திரம்:


"ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீபகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டமகரிஷி ப்யோம்
நமஹ நமஹ வசியவசிய ஸ்ரீபாதுகாம் பூஜையாமே! தர்ப்பயாமே!"


காகபுஜண்டரின் ஞானசித்தி மூலமந்திரம்:


"ஞானானந்தமயம்
தேவம் நிர்மல படிகாத்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
காகபுஜண்டம் உபாஸ்மகே!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...