சனி, 8 மார்ச், 2014

குருவின்றி சகல சாஸ்திரங்களையும் கற்கும் யோகம் யாருக்கு அமையும்

ஒருவருக்கு குரு என்பவர் சகலவற்றையும் கற்றுக் கொடுப்பவராகவும் ஒருவருடைய வாழ்வில் கல்வி கண் திறந்து அவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றக் கூடியவராகவும் இருப்பார். பொதுவாக குருவில்லாமல் ஒருவரால் கல்வி கற்பது என்பது மிகவும் கடினம். அதனால்தான் ’குரு இல்லா வித்தை பாழ்’ என்று சொல்லி வைத்துள்ளார்கள். அப்பேர்பட்ட குரு இல்லாமல் ஒருவர் சகல சாஸ்திரங்களையும் கற்று கொள்ள முடியுமா.

முடியும் ஆனால் அதற்கான கிரக நிலைகள் இருக்க வேண்டும். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ராகு மகர ராசியிலும் கேது கடக ராசியிலும் இருப்பவர்களுக்கு இந்த யோகம் அமையும். இந்த நிலையில் ராகு கேதுக்கள் மாறியிருந்தாலும் பரிவர்த்தனை என்ற அடிப்படையில் இந்த யோகம் அமையும். இது ஏன் என்பதை விளக்கிச் சொல்ல புராண வரலாற்றை இங்கே சொல்வோம்.

முன்பொரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அசுரனொருவன் பிரம்ம தேவரிடமிருந்து நான்கு வேதங்களையும் கவர்ந்து எடுத்து (இக்கால பாஷையில் சொல்வதானால் திருடி) கொண்டு போய் மகர ஆழியில் (அதாவது கடல் – மகர ராசி கடல் போன்றது, ஜல ராசி என்றும் சொல்வார்கள்) வைத்து வாழ்ந்து வந்ததாகவும், அது எங்கு தேடியும் கிடைக்காமல், பிரம்ம தேவர் திருமாலின் உதவியை நாட அவரும் பெருமுயற்சிக்குப் பிறகு மகர ஆழியில் மறைந்திருந்த அசுரனை வதம் செய்து அதை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் அப்போது ரிக், யஜூர், சாம வேதங்களை கடக ஆழியில் வைத்து (இதுவும் ஒரு ஜல ராசிதான்) கேதுவை காவலாகவும் நான்காவது வேதமான அதர்வண வேதத்தை மகர ஆழியில் வைத்து ராகுவை காவலாக வைத்து அருள் செய்தார். இவ்விதம் காவலாக அமர்ந்த ராகு கேதுக்கள் குருவின்றி தாமே அவ்வேதங்களைக் கற்றுக் கொண்டு மறை ஓதும் அந்தணர்கள், மறை ஞானமுள்ள முனிவர்கள் போன்றார்களுக்கு சமமான அந்தஸ்தைப் பெற்றார்கள்.

மேலும் இந்த அமைப்புள்ளவர்கள் கல்வி மற்றும் கேள்விச் செல்வத்தில் சிறந்து விளங்குவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த அமைப்புள்ளவர்கள் பொருட் செல்வத்தில் குறை பெற்று காணப்படுவார்கள் எனப் படுகிறது. இது பொது விதி. தன யோகங்களோ, வேறு ராஜ யோகங்களோ அமையப் பெற்றுள்ளவர்கள் நிச்சயம் தனவான்களாக இருப்பார்கள்.

இந்த அமைப்பிற்கு உதாரண ஜாதகங்கள் என்றால் வள்ளலார் வடலூர் ராமலிங்க அடிகளாரின் ஜாதகத்தில் ராகு மகரத்திலும் கேது கடகத்திலும் இருக்கிறார்கள். இன்னொருவர் திருமுருக கிருபானந்த வாரியார். அவர் ஜாதகத்தில் கேது மகரத்திலும் ராகு கடகத்திலும் இருக்கிறார்கள்.

அடியேனுடைய ஜாதகத்திலும் மகர ராகுவும் கடக கேதுவும்தான். பல சந்தர்ப்பங்களில் பிறருடைய தயவில்லாமல் பலவற்றைக் கற்றிருக்கிறேன். கற்றும் வருகிறேன். இதற்கு மேல் சொன்னால் அது நான் என்னையே சுய விளம்பரப் படுத்திக் கொள்வது போலும் சுய புராணம் பாட பதிவு ஆரம்பித்தது போலும் ஆகி விடும். இதைப் படிக்கும் யாரும் தங்களுக்கு இந்த அமைப்புள்ள ஜாதகம் இருந்தாலோ அல்லது தெரிந்தவர் யாரும் இருந்தாலோ எனக்கு தெரியப் படுத்துங்கள். என் ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

என் உறவுக்காரர்கள் இருவருக்கு இந்த அமைப்பு இருக்கிறது. இருவருக்கும் கேது மகரத்தில், ராகு கடகத்தில். அதை எனது ஆராய்ச்சிக்காக வைத்திருக்கிறேன்.

அடுத்து இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்த்து விடுவோம். ராகு கேது ஆகியவற்றின் தசா புத்தி அந்தர காலங்களில் யாருமே படாத பாடு படுவார்கள். போதுமடா சாமி என்ற நிலைக்குத் தள்ளப் படுவார்கள். ஆனால் கடகம், மீனம் ஆகிய ஜால ராசிகளை லக்கினங்களாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. அவர்களுக்கு ராகு தசா புத்தி காலங்களில், பிற்கால வாழ்க்கைக்கு தேவையான பாக்கியங்களும், ஆடை, ஆபரண, அணிகலன்  மற்றும் செல்வ சேர்க்கையும் ஏற்படும். இதை விளக்கும் ஜோதிட பாடலை கீழே பார்ப்போம்.

பேசுலக்கின மீனநண்டிற் பிறந்தவர் தங்கட்கெல்லாம்
பாசமாய் மகாதிசையின் பலன்களைப் பார்க்கும்போது
தேசுறு கரியபாம்பின் திசைவரிற் பாக்கியங்கள்
தூசுபொன் சோபனம் நற்சுப பலன் பெறுவர்தாமே

அதே போல் கன்னி, மகர லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு கேது தசா புத்திகளில் பெரும் செல்வம் சேரும். பலரும் போற்றிப் பாரட்டும் வகையில் வாழ்க்கையும் வாகன சேர்க்கையும் அமையும். இதை விளக்கும் ஜோதிட பாடலை கீழே பார்ப்போம்:-

தார்செறி மகரங்கன்னி தனிற் பிறந்தோர்கட்கெல்லாம்
பார்செறி மகாதிசையின் பலன்களைப் பார்க்கும் போது
சீர்பெறு கேதுவான திசை வரும்போது செல்வம்
ஊர்திசார் அரசரால் சன்மானமுண்டாங் கண்டீரே

இப்பாடலின் படி அரசரால் சன்மானம் பெற இந்த காலத்தில் அரசர் எங்கே இருக்கிறார். அரசாங்க சன்மானம் (அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் மூலாமாக) பெறலாம்.

இன்றைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன். சுப்பையா வாத்தியார் எப்போதும் சொல்வது போல்தான். உங்கள் நேரம் பொறுமை இவற்றை கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன். இடையில் வேறு தலைப்பில் பாடம் நடத்திவிட்டு பிறகு ராகு கேதுக்களைப் பற்றிய பாடத்தை மேலும் தொடரலாம் என்று இருக்கிறேன்.

2 கருத்துகள்:

  1. அன்புள்ள வெங்கட் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கம்!!!

    என்னுடய ஜாதகத்தில் தாங்கள் சொன்னது போல் அமைப்பு உள்ளது. ராகு மகரம் இல் மற்றும் கேது கடகத்தில். கடக லக்னம். தங்கள் கட்டுரையில் உள்ளது உண்மை.

    என் பெயர் செல்வகுமார்.
    email: 4selva2kumar0@gmail.com

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்.
    நீங்கள் சொன்ன அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளது.
    மகர லக்னம்.லக்னத்தில் ராகு,செவ்வாய் ,3ல் சுக்ரன் உச்சம்,உடன் புதன் நீசம்,4ல் சூரியன்
    உச்சம்,5ல் சனி,7ல் கேது, 8ல் சந்திரன் ,11ல் குரு.மக நட்சத்திரம் சிம்ம ராசி.கேது திசை நிலுவை 4 வருடம் 1மாதம் .நடப்பு திசை செவ்வாய் ,
    education B.E mechanical.
    நானும் பல் விடயங்களை குறிப்பாக ஜாதகம்.நவீன கணினி. சம்பந்தமானவைகளை மற்றும் பல சுய முயற்சியால் கற்றுக்கொண்டேன்.எனக்கு ராகு தசை எப்படி இருக்கும் என அறிய ஆவல்
    பாலச்சந்தர்
    krbalachander@gmail.com

    பதிலளிநீக்கு

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...