சனி, 1 மார்ச், 2014

சுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன்



சுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.

இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் 'சுக்கிரன்' என்றும் தூய வெண்மையாக வந்ததனால் 'வெள்ளி' என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.

மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு சான்றாக பெரியாழ்வார் தம் திருமொழியால் இவ்வாறு உரைக்கிறார்.

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியால்
தக்கதி தன்றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையயே அச்சோ அச்சோ.
சங்க மிடத்தானே அச்சோ அச்சோ!
சுக்கிரனின் அம்சம், ஆதிக்கம்


ஒவ்வொருவர் வாழ்க் கையிலும் இன்ப-துன்பங்கள், ஏற்ற-இறக்கங்கள், லாப- நஷ்டங்கள் மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் நியதிதான் என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணியமே காரண மாகும். இந்த பூர்வ யோகத்தை நாம் பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக தசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.

பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்யமான நீண்ட ஆயுள். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.

தனம், குடும்பம், திருமண விஷயங்களில் இவரது அருள் தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசா காலமான 20 வருடங்களில்  மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால்  எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம். ஒவ்வொரு லக்னம், ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் யோகத்தைச் செய்யும். சில கிரகங்கள் அதன் ஆதிபத்ய தன்மைக்கு ஏற்ப அவயோகங்களையும் செய்யும் என்றாலும் பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிட்டும்.

கார் -பங்களா நிலம், பூமி ஆகியவற்றிற்கு அதிபதி செவ்வாய். ஆனால், அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள் அடுக்குமாடிகள் சொகுசு பங்களாக்கள், தோட்ட வீடுகள்  போன்ற நவீன கட்டிடங்களுக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில் சுக்கிர பலம் இருந்தால்தான் இதைப் போன்ற வசதியான யோகம் கிடைக்கும். அதேபோல், சுக்கிரனின் அருள் யோகம் இருந்தால்தான் ஒருவருக்கு விதவிதமான வாகனங்கள், ஆடம்பரகார்கள் சொகுசு வண்டிகளில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

சுக்கிரனால் உண்டாகும் நோய்கள்

சுக்கிரன் பலம் குறைந்து ஜாதகத்தில் இருந்தால் கட்டி, பிளவை, மர்மஸ்தான நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவை ஏற்படும். கண்நோய், கண் பார்வைக் கோளாறு போன்றவை உண்டாகும். சுக்கிலத்திற்கு அதிபதியாக இருப்பதால் விந்து குறைபாடு, விந்து அணு குறைபாடு ஏற்படும். ஆகையால் குழந்தை பாக்கியம், குழந்தை பாக்கியத்தடை குறைகள் ஏற்படும்.

சுக்கிரன் அம்சங்கள்

கிழமை          - வெள்ளி
தேதிகள்         - 6, 15, 24
நட்சத்திரம்        -பரணி, பூரம், பூராடம்
ஆட்சி வீடு        -ரிஷபம், துலாம்
உச்சம்     -மீனம்
நீச்சம்            - கன்னி
ரத்தினம்     -வைரம்
உலோகம்        - வெள்ளி
தானியம்      -மொச்சை
நிறம்     -வெண்மை
ஆடை    - வெண்பட்டு
தசா காலம்      - 20 ஆண்டுகள்
கிரக அமைப்பு  -  பெண்
வாகனம்        - கருடன்
புஷ்பம்    -வெள்ளை தாமரை
சுவை     -இனிப்பு.

சுக்கிரன் பலம் பெற்றோ, குறைந்தோ இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். வெள்ளிக்கிழமை விரதம்  இருந்து அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம். பௌர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசிக்கலாம். கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர தலத்தில் தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார், சுக்கிர பகவான். இவரை வழிபட்டால் எல்லாவகைத் திருமணத் தடைகளும் நீங்கும்.

கருத்துவேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் இங்கு மனமுருக பிரார்த்தித்தால் ஒன்று சேர்வார்கள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்து வைத்து, அவர்களிடையே அன்யோன்யத்தை ஏற்படுத்தக்கூடியது கஞ்சனூர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் கோயில், சுக்கிரனுக்கு உரிய தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் கோளாறுகள் நிவர்த்தியாகும். வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...