வெள்ளி, 7 மார்ச், 2014

சூரியன் வணங்கிய தலங்கள்



சூரியன் வணங்கிய தலங்கள் ஞாயிறு திருத்தலம், சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது. இத்தல புஷ்பரதேசுவரரை வணங்கி சூரிய பகவான் பேறு பெற்றார். அவர் உருவாக்கியதுதான் இங்குள்ள சூரிய புஷ்கரணி. சூரியதசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் இத்தலத்தில் தனி சந்நதியில் அருளும் சூரியனை ஞாயிற்றுக்கிழமையன்று வணங்கி பேறுகள் பெறுகின்றனர்.

சென்னை, ராமாபுரம் அருகே குன்றத்தூர் கெருகம்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கத்தில் ஓர் சூரிய தலம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தல ஈசனை சூரிய பகவான் வணங்கியிருக்கிறார். ஆறு வாரங்கள் தொடர்ந்து ஈசனை வணங்க, தடைகள் தவிடுபொடியாகின்றன.

கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலக்குடியில் அருளும் பிராணநாதேஸ்வரரும் அன்னை மங்களாம்பிகையும் நவகிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர்கள். சூரியனார் கோயிலை தரிசிக்கும் முன்பு இத்தலத்தை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருவாரூர்-மயிலாடுதுறை சாலையிலுள்ள பேரளத்திற்கு அருகே உள்ளது திருமீயச்சூர். சூரியனின் ஒளி நல்லவை கெட்டவை இரண்டிற்கும் உதவுவதால் கெட்டவைக்குரிய பாவம் சூரியனின் நிறத்தை மங்கச் செய்தது. சூரியன் இங்கு தவம் செய்து தன் சுயநிறம் பெற்றாராம்.

திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள, நவகயிலாயங்களில் ஒன்றான பாபநாசம், சூரிய தலமாக போற்றப்படுகிறது. ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத் திருமேனி இங்குள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர், முருக்க மர நிழலில் ஜோதிலிங்கமாய் அருள்கிறார். இங்கு சூரியன் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து, தீர்த்தங்களை அமைத்து வழிபட்டிருக்கிறார்.

கும்பகோணம்-கஞ்சனூரை அடுத்துள்ளது, சூரியமூலை. கோடி சூரியர்கள் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றதால் இத்தல ஈசன் ருத்ரகோடீஸ்வரன் என்று போற்றப்படுகிறார்.

தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, திருப்பரிதி நியமம். இத்தல ஈசன் பாஸ்கரேஸ்வரர் என்றும் பருத்தியப்பர் என்றும் வணங்கப்படுகிறார். இந்த பெயர்களுக்குக் காரணம், சூரியன் இவரை வழிபட்டதே.

செங்கல்பட்டு-மாமல்லபுரம் பாதையில் உள்ள திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரரை துவாதச ஆதித்யர்கள் வழிபட்டதால், இத்தலம் பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்யபுரி என்றெல்லாம் வழங்கப்படுகிறது.

தன்னால்தான் உலகிற்கு ஒளி கிடைக்கிறது எனும் சூரியனின் ஆணவத்தை, தன் நெற்றிக் கண்ணால் உலகிற்கு ஒளி தந்து அழித்தார், ஈசன். தன் தவறை உணர்ந்த சூரியன், ஈசனை சரணடைந்தார். அந்த ஈசன், பழநி மலையின் அடிவாரத்தில், திருவாவினன்குடியில் அருள்கிறார்.

மயிலாடுதுறை-தரங்கம்பாடி வழியில் உள்ள திருச்செம்பொன்பள்ளியில் பன்னிரெண்டு ஆதித்யர்களும் சூரியபுஷ்கரணி அமைத்து சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டனர். இத்தலத்தில் சித்திரை மாதம், சௌரமகோற்சவம் எனும் சூரியப் பெருந்திருவிழா புகழ் பெற்றது.

தஞ்சை மாவட்டம்-திருவையாற்றுக்கு அருகில் உள்ளது திருச்சோற்றுத்துறை. இத்தல ஈசனை சூரியபகவான் வழிபட்டதை திருநாவுக்கரசர் தன் பதிகத்தில் போற்றிப் பாடியுள்ளார்.

கும்பகோணத்தை அடுத்த திருநாகேசுவர ஈசனை நாகங்களோடு, ஆதித்யனும் தொழுது பேறு பெற்றுள்ளான் என்பதை ‘ஞாயிறும் திங்களும் கூடி வந்தாடு நாகேசுவரம்’ என்று அப்பர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

சிவகங்கையிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள திருவாடானை தலத்தில், காசியில் உள்ளது போலவே, சூரியன் 12 லிங்கங்களை ஸ்தாபித்து பூஜித்தான்.

மயிலாடுதுறைக்கு அருகே நீடூரில், ஆதித்ய அபயப்பிரதாம்பிகை அருள்கிறாள். ஈசனின் சாபத்திற்கு அஞ்சிய சூரியனுக்கு அபயம் அளித்த அம்பிகை இவள். சூரியன் அம்பிகையை வழிபட ஏற்படுத்திய சூரிய புஷ்கரணி இங்கு உள்ளது.

கும்பகோணம், இன்னம்பூரில் அருளும் எழுத்தறிநாதரை சூரியபகவான் வழிபட்டு, சாஸ்திரங்களில் மேலும் தேர்ச்சி பெற்றான் என்கிறது புராணம்.

திருச்செங்காட்டங்குடியில் பன்னிரு ஆதித்யர்கள் ஈசனை வணங்கியதால் ஆலயம் அமைந்துள்ள மேற்கு வீதி, துவாதச ஆதித்ய வீதி என்றே அழைக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் - திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாழ் தலத்தில் அருளும் அழகியநாத சுவாமியை சூரியன் வணங்கி பேறு பெற்றதால் அவர் ஆதித்யேசர் எனப்படுகிறார்.

திருவெண்காட்டின் சூரிய தீர்த்தக்கரையில் உள்ள சூரியலிங்கம் சூரிய பகவானால் ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்டது.

தஞ்சை, திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள தலைஞாயிறு மகாகாளேசுவரரை சூரியபகவான் வழிபட்டு, அத்தலத்திற்கு வரும் பக்தர்கள் கோரும் பலன்கள் எல்லாவற்றையும் அருளுமாறு பிரார்த்தித்துக் கொண்டானாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...