---------------
கார்த்திகை நட்சத்திற்கு முதல் நாள் தீபம்.
மறுநாள் கார்த்திகை தீபம். தீபம் இருளை நீக்கி பேரொளியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும்.பௌர்ணமி தினத்தன்று சந்திரன் கிருத்திகா நக்ஷத்திரத்தில் இருக்கும் போது கொண்டாடப் பட்டது.அன்று மகாபலி சக்ரவர்த்தி முக்தி அடைந்த தினம் என்பார்கள். கார்த்திகையில் நெற்பொறி நைவேத்தியம் செய்ய வேண்டும். இவை முக்தி பெற்றவருக்கு மறுபிறவி இல்லை என்பதை கட்டுகிறது.
கார்த்திகைத் தீபத் திருவிழா பண்டைக் காலந்தொட்டு நம்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமது தொல்காப்பிய உரையில், நச்சினார்க்கினியர், ‘கார்த்திகை திங்களில் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு’ என்று கார்த்திகைத் தீபத்தைக் குறிப்பிடுகிறார். ‘கார் நாற்பது’ என்ற நூலிலும் கார்த்திகை தீபம் பற்றிய விரிவான விளக்கம் கிடைக்கிறது. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ‘தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்று கார்த்திகை விளக்கு பற்றி பாடி மகிழ்கிறார்.
தமிழர்களிடையே வழங்கும் பழமொழிகளிலும் கார்த்திகை தீபம் ஒளி பரப்புகிறது. ‘குன்றில் இட்ட விளக்குபோல்’ என்று சாதாரணமாகத் தமிழ் மக்கள் பேசிக்கொள்வதுண்டு. திருவண்ணாமலையில் ஏற்றி வைக்கும் ஜோதி சொரூபமான மகாதீப தரிசனத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய பழமொழியாக இருக்கலாம் என்பார்கள். ‘மலை விளக்கு’ என்பதும் அண்ணாமலைக் கார்த்திகைத் தீபத்தைக் குறித்தே.
சிவபெருமான் மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் ஜோதிப் பிழம்பாய் விஸ்வரூப தரிசனம் கொடுத்து மலையாய் குளிர்ந்த நாளே கார்த்திகை பௌர்ணமி தினம். எனவே இந்நாளில் சிவன் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் அண்ணாமலையாரின் ஜோதி தரிசனம் கண்ட பலன் ஏற்படும் என்பர். இந்நாளில் அன்னாபிஷேகம் செய்வது மிக விசேஷம். இந்நாளில் ஈசனின் பன்னிரு ஜோதிர் லிங்க வடிவங்களை தரிசிப்பது மகத்தான பலன் தரும் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டிய கருத்தை வலியுறுத்தி சிவபெருமான் கடுந்தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி தேவிக்கு கார்த்திகை பௌர்ணமி நாளில்தான் உடலின் இடப்பாகத்தைக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரரானார். இந்நாளில் லிங்காஷ்டகம் சொல்வதும் கேட்பதும் தீராத வினை தீர்த்து நீங்காத செல்வமும் நிலைத்த ஆயுளும் தரும்.
கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியில் (பிருந்தாவன துவாதசி) துளசி தேவி மகாவிஷ்ணுவை மணந்ததாக ஐதீகம். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசி தளத்திற்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். துளசி மணிமாலை அணிபவர்களிடம் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசி பூஜை நடத்துவதும் சிறப்பானதே. இதனால் லட்சுமி தேவி இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள். இந்நாளில் அன்னதானம் செய்தால் கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்.
இந்த கார்த்திகைத் திருநாளில், மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து தாமரை இதழ்களால் அர்ச்சித்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூடப் பெறலாம். இதே நாளில், பெருமாள் கோயிலில் விஷ்ணு சந்நதிக்கு எதிரே அமர்ந்துகொண்டு பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் நம்மை வந்து சேரும். கார்த்திகை மாத சுத்த பஞ்சமி திருநாள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் திருமகள் சேர்ந்த புண்ணிய தினமாகும். இந்நாளில் காவிரியாற்றிலும் புனித தீர்த்தங்களிலும் நீராடி திருமாலையும் திருமகளையும் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேரும் என்கின்றன சாஸ்திரங்கள்.
நவகிரக நாயகர்கள் பிரம்மாவின் சொற்படி கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரு வாரங்கள் நோன்பு நோற்று சாப விமோசனம் பெற்றனராம். கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு மட்டுமாவது உணவு உண்ணாமல் உபவாசமிருந்து, சிவாலயம் சென்று வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் சிவசக்தியின் பேரருளால் நீங்கி நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் பெருகும். இம்மாதத்தில் விளக்கு தானம் செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும். கார்த்திகை சோம வார (திங்கட்கிழமை) விரதம் அனுஷ்டிப்பவர்கள் சகல மேன்மைகளையும் பெறுவர். இவ்விரதத்தை 12 வருடங்களாகக் கடைப்பிடித்து நாரதர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.
நன்றி: இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக