புதன், 15 பிப்ரவரி, 2017

குரு (வியாழன்) பார்க்க கோடி நன்மை

🌿 பூமியில் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய அனைத்து நல்லது, கெட்டதிற்கும் அவனுடைய ஜாதகத்தில் பிறக்கின்ற நேரத்தில் ராசி மண்டலத்தில் எந்த இடத்தில், எந்த கிரகம் சஞ்சரிக்கின்றதோ அதைப் பொறுத்தே வாழ்வில் நன்மையையும், தீமையையும் மாறி மாறி அனுபவிக்கின்றனர்.

🌿 நவகிரகங்களில் ஐந்தாவதாக இடம் வகிப்பவர் குரு (வியாழன்) பகவான். இவருக்கு வியாழ பகவான், பிரகஸ்பதி என்ற வேறு பெயர்களும் உண்டு. தேவ குருவாக இந்திர சபையில் வீற்றிருக்கும் இவர் கல்வியில் சிறந்தவர், நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர். பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கிரச முனிவருக்கும் சிரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான்.

வாக்கிற்கும், அறிவுக்கும் அதிதேவதையான குருபகவான் :

🌿 எங்கும் பிரகாசமாய், ஆனந்த பூர்த்தியாய், அணுவிற்கு அணுவாய், ஜோதிப் பிளம்பான இறைவன் படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் அவர்களின் முன் வினைகளுக்கேற்ப சுகங்களையும், துக்கங்களையும் அனுபவித்து வருவது கண்கூடான ஒரு உண்மையாகும். வாழ்வில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை நிறைந்திட வேண்டும்.

🌿 ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த ஜாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராய்ச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாகும். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஓராண்டு காலமாகும்.

🌿 அதிதேவதையான குரு உச்ச வீடாகிய கடகராசியில் இருக்கப் பிறந்த ஜாதகன் என்றுமே சுகமான வாழ்வு வாழ்வான் என்பது ஜோதிடசாஸ்த்திரம். மேலும், சுவாதி, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையில் அமைந்தால் அன்றைய நாள் குருபகவான் வழிபாட்டிற்கு மேன்மேலும் சிறப்புடையதாகும்.

🌿 வியாழ பகவான் தங்க நிறம் கொண்ட திருமேனி படைத்தவர். நான்கு திருக்கரங்களையும், அவற்றில் கமண்டலம், அட்சமாலை, யோக தண்டம், அபயம் என ஏந்தி இருப்பார். மேலும் கிழக்கு நோக்கி தலையில் மகுடம் தாங்கிய திருமேனி கொண்ட இவர் பொன்னிறச் சந்தனம் பூசி, பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாடை, பொற்குடை, பொன்னிறக்கொடி, பொன் தேர் ஆகியவற்றைக் கொண்டவர்.

🌿 தன்னைப் பணிந்து விரதமிருந்து வழிபடும் அடியவர்க்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து, குற்றங்களைக் களைத்து ஆபத்துக்களைப் போக்கி, நோய் நொடிகளை அகற்றி வேண்டிய செல்வங்களையும், கௌரவத்தையும், நல்ல சந்ததி ஏற்பட சற்புத்திர பாக்கியத்தையும் தருபவர்.

குருபகவான் திருநாமங்கள் :

🌿 இவருக்கு சுராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹhரகர், சௌம்யமூர்த்தி என பல்வேறு திருநாமங்கள் உண்டு.

🌿 வியாழ பகவான் தன் மனைவி தாரையோடும் பரத்துவாசர்-எமகண்டன்-கசன் என்னும் பிள்ளைகளோடும் எழுந்தருளி இருப்பார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர், வியாழ பகவானைத் துதித்து கீர்த்தனை எழுதியிருக்கிறார். வியாழ பகவான் மிகுந்த வலிமை உடையவர்.

🌿 நாமும் விரதமிருந்து ஆலயம் சென்று குருபகவானையும் தட்சணாமூர்த்தியையும், இஷ்ட தெய்வங்களையும், குல தெய்வங்களையும் வணங்கி வழிபட்டு குருபார்வை பெற்று சகல தோஷங்களும் நீங்கி மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...