புதன், 15 பிப்ரவரி, 2017

சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்

☀ திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரை" என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம். மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம் தான். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

☀ ஆகவே மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும். நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே நடத்தப்பட்டு வருகிறது.

☀ ஒரு நாள் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ஆகா! அற்புதம்! அற்புதமான காட்சி! என்று மனமுருகி சத்தம் போட்டார். அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். 'சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?" என்றனர்.

☀ 'திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால் தான் அவ்வாறு கூறினேன்" என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, 'ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா!" என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு. ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.

☀ திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி படைப்பார்கள். களி என்பது ஆனந்தம் என்று பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன் வியாக்ரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...