திங்கள், 24 நவம்பர், 2014

திருவண்ணாமலை தீபம்


இறைவன் பஞ்சபூதத்திலும் உள்ளார், என்பதை தற்போதைய இந்து மதமும், 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வடக்கே வாழ்ந்து, பின் தெற்கே இடம்பெயர்ந்த, சிந்து சமவெளி திராவிடர்கள் இயற்கையை வணங்கினர் என்று வரலாறும் கூறுகிறது. இயற்கையை நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்று 5 வகைகளாகப் பிரிக்கலாம். இதனைத்தான் பஞ்சபூதங்கள் என்று சொல்கின்றனர். இந்து புராண, இதிகாசங்களிலும், அக்னி தேவன், வருண பகவான், வாயு பகவான் என்று துறைத் தலைவர்களை(HOD - Head of Department), வேதகாலத்தில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் கொடுத்து பணியில் நியமித்தார்கள்.
இருப்பினும், தென்னிந்தியாவிற்கு வந்த திராவிடர்கள் இந்தHODகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கருதியோ, தமது துறைகளை (மக்களின் நல்வாழ்வுக்காக) சரிவர கவனிப்பதில்லை என்று கருதியோ, அல்லது முதல்வர் செல்லில் நேரடியாக முறையிட்டால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருதியோ, முதல்வரான, ஆதிமுதல்வரான, ஆதிமூலமான, சிவபெருமானையே இந்த பஞ்சபூதங்களையும் ஆளுமாறும், கூடுதல் பொறுப்பை ஏற்று மனித குலம் தழைக்க அருள் செய்யுமாறும் வேண்டத் தொடங்கினர். 

தென்னாட்டவர்க்குச் சிவனே போற்றி !
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

என்று சிவனை வேண்டினர். அதனை சிவனும் ஏற்று, மக்களுக்குபஞ்சபூதங்களால் வரும் சோதனைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை வழங்க வேண்டியும், மக்களின் துயர் தீர்க்கவும் 5 முகாம்களை ஏற்படுத்தினார். 
நிலம் : காஞ்சிபுரம்
நீர் : திருவாணைக்காவல்
நெருப்பு : திருவண்ணாமலை
வாயு : காளஹஸ்தி
ஆகாயம் : சிதம்பரம்

இந்த பதிவில் நாம் அக்னி சொருபமாக திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவனையும், திருவண்ணாமலையின் சிறப்பையும் காணலாம். திருவண்ணாமலைக்கு வரலாறு உண்டு. திருவண்ணாமலைக் கோவில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் (சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு) சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகளும், தொல்பொருள் ஆய்வுகளும் கூறுகின்றன. கி.பி 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அனைவரும் இன்றளவிலும் வியக்கின்ற திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் வாழ்ந்த இலக்கியச் சான்றுகளும், வரலாறும் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் ரமண மஹரிஷ, யோகி ராம்சூரத்குமார் போன்ற பலரும் ஞானம் பெற்ற, சமயக் குரவர்களால் பாடப் பெற்ற தலம்தான் திருவண்ணாமலை. திருவண்ணாமலை ஒரு சிறிய மலைதான், சில மணி நேரங்களில் வலம் வந்துவிடலாம். ஆனால் இந்த மலையை, இதன் சிறப்பை உணர்ந்த பக்தர்கள் முழுப் பழமாக சாப்பிட்டால்தான் கூடுதல் பலன் அடையலாம் என்று திருவிளையாடலில், நாரதர் சொன்னதைப் போல, சிவனையும் வலம் வந்தது போலவும் ஆயிற்று, அக்னியையும் (தீபம்) வலம் வந்தது போலவும் ஆயிற்று, மகான்கள் தங்கி ஞானம் பெற்ற புனித மலையை வலம் வந்து அவர்களின் ஆசியையும் பெற்றது போலவும் ஆயிற்று என்று நினைத்து கிரி வலம் வந்து ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்து விடுகிறார்கள்.

கார்த்திகை மாதத்தில், வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம் வரும் நாளில், திருவண்ணாமலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி சிவனை அக்னி வடிவில் வழிபடுகிறோம். இந்த வழிபாட்டில் எந்த ஒரு ஒளிவும், மறைவும் இல்லை. குன்றில் இட்ட தீபத்தை தெள்ளத் தெளிவாக அனைவரும் காணலாம். இனி, கந்த புராணத்தையும் சற்று நோக்கலாம். அசுரனின் செயலால் கோபப்பட்ட, சிவன் அசுரனை அழிக்க வேண்டி நெற்றிக் கண்ணைத் திறந்ததாகவும், அதிலிருந்து 6 தீப்பொறிகள் வெளிவந்து சரவணப் பொய்கையில் விழுந்து, குளிர்வடைந்து குழந்தைகளாக மாறியதாகவும், அந்த 6 குழந்தைகளை வளர்க்க (பார்வதி தேவி ஹவுஸ் ஒயிஃப் அல்ல, ஒர்க்கிங் உமன் என்பதால்) 6 பேபி சிட்டர்களை சிவன் பணியில் அமர்த்தியதாகவும், அவர்கள் நல்ல முறையில் பால முருகர்களை வளர்த்து, சிவ, பார்வதியிடம் ஒப்படைத்தபின், அவர்களை ஆசீர்வதித்த சிவன், நீங்கள் வானத்திலும், மனிதர் மனதிலும், நிலையான இடத்தைப் பெறுவீர்கள் என்று சொல்லி அவர்களை, கார்த்திகை நட்சத்திரங்களாக மாற்றிவிட்டார் என்று கந்த புராணம் கூறுகிறது. பண்டைய ஜோதிட நூல்களிலும் அறுமீன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதையில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பார்வதி, சிவனுடன் இணைந்து, பின் பிள்ளை பெறவில்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர். இறைவன், இறைவி இணைந்து பிள்ளை பெறவேண்டும் என்றில்லை. அவர்கள் எல்லாவற்றையும், கடந்தவர்கள். ஏன் இதனை சொல்கிறேன் என்றால் பின்னால், மகரஜோதி கதைக்கு உதவலாம் என்பதால்தான்.

இவ்வாறு நட்சத்திரமானவர்கள் ஆறுமுகப்பெருமானை வளர்த்தவர்கள் என்பதால், முருகர் கோவிலிலும் கார்த்திகைத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் அறுமீன்களை வெறும் கண்களாலேயே வானத்தில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...