சனி, 18 ஜூலை, 2015

உருத்திராட்சமும், ஜெபம் செய்யும் முறைகளும் ! அதனால் கிடைக்கும் அபூர்வமான பலன்களும் !

குறிப்பிட்ட சில எழுத்துக்களின்
சேர்க்கையினால் உருவாகிடும் சொல்லை
அல்லது சொல்தொடரை மீண்டும் மீண்டும்
உச்சரிப்பதையே செபம் என்கிறோம். இதனை
உரு அல்லது உருவேற்றல் என்றும் அழைப்பர்.
இந்த முறையில் செபிப்பது அநேகமாய்
எல்லா மதங்களிலும் இருக்கிறது.
சித்தர்களும் இந்த செபித்தலின் அவசியம்
மற்றும் அதன் மகிமைகளை தங்களின் பல
பாடல்களில் உரைத்திருக்கின்றனர்.
ஆக செபம் என்பது தன்னிலும் மேலான சக்தி
அல்லது இறையினை தொடர்புகொள்ளும்
வழியாக இருக்கிறது. இது மதம், மொழி,
இனம் என அத்தனை விதமான
வரையறைகளுக்கும் அப்பாற்பட்டது. கவன
குவிப்புடன் செய்யப் படும் எந்தவொரு
செபித்தலும் மிக நிச்சயமாய் பலனைத்
தருகிறது. இதை மறுக்க முடியாது.
இத்தகைய செபத்தினைப் பற்றி அகத்தியர்
தனது “வாத சௌமியம்” என்கிற நூலில் பின்
வருமாறு கூறுகிறார்.
"செய்யப்பா செபமதுதான் தினமுஞ்செய்தால்
சிவசிவா ஆதாரஞ் சித்தியாகும்
மெய்யப்பா கபமதுவும் விலகிப்போகும்
வேதாந்தம் சித்தாந்தம் மெய்யுள்தங்கும்
மையப்பா சுழிதனிலே வாசியேறும்
மைந்தனே அட்டாங்கம் திட்டமாகும்
பொய்யப்பா போகாது தன்னைப்பாரு
பூரணமும் காரணமும் பொருந்தும்பாரே"
- அகத்தியர் -
"பாராய்நீ புலத்தியமா முனியேயப்பா
பதிவாகச் செபதவங்கள் செய்வதற்கு
பேராகச் சொல்லுகிறேன் மைந்தாகேளு
நிசமான மணியெடுத்து செபமேசெய்ய
பிலமான ருத்திராக்கம் மெத்தநன்று
விண்ணான சித்தியெல்லாம் தான்பெறவே
நித்தியமும் நிலையறிந்து சுத்தமாக
நேமமுடன் தவறாமல் செபமேசெய்யே"
- அகத்தியர் -
தினமும் தொடர்ந்து செபித்து வந்தால்
அனைத்து ஆதரங்களும் சித்தியாகுமாம்.
கபமும் விலகிப்போகுமாம், அத்துடன்
வேதாந்தமும் சித்தாந்தமும் உடம்பினுள்ளே
தங்கும் என்கிறார். சுழிமுனையில் வாசி
ஏறுமாம், செபிப்பவர் உடலானது அழியா
நிலையைப் பெறுவதுடன் பூரணமும்,
கரணமும் பொருந்திவிடுமாம். மேலும்
செபமோ தவமோ செய்வதாக இருந்தால்
அதற்க்கு உருத்திராட்ச மணியே
மிகச்சிறப்பானது என்கிறார்.
உருத்திராட்ச மணியைக் கொண்டு
செய்யப்படும் செபங்கள் முலம் இலகுவாக
சித்தி பெறலாம். எனவே நாள் தவறாமல்
தினமும் சுத்தமாக உருத்திராக்க மணி
கொண்டு செபம் செய்ய வேண்டும் என்கிறார்
-அகதியர்.
எல்லாம் சரிதான்!, உருத்திராட்ச மணியை
வைத்துக் கொண்டு எப்படி செபம் செய்வது?
அதனையும் அகத்தியர் தனது நூலில்
விவரித்திருக்கிறார். அதாவது மிகச் சிறந்த
சிவவேடத்தைக் கொண்டு செபிக்க வேண்டும்
என்கிறார்.
உருத்திராட்சமும்!, செபமும்!, சிவ வேடமும்!
----------------------------------------------------------------------
இப்படியான செபத்தினை எவ்வாறு செய்திட
வேண்டும் எனவும் அகத்தியர் தனது “வாத
சௌமியம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார்.
அதன் படி செபம் செய்பவர்கள் தனிமையான்,
சுத்தமான சூழலில் செய்திட வேண்டுமாம்.
கோவில், மலை உச்சி, குகைகள் போன்ற
ஆளரவம் குறைந்த இடங்கள் உத்தமம்
என்கிறார். இடத்தினை தேர்ந்தெடுப்பதைப்
போலவே செபிக்கும் போது அணிய வேண்டிய
உடைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இதனை
அகத்தியர் “சிவவேடம்” என்கிறார். மேலான
சிவனின் வடிவில் அமர்ந்து செபிப்பதையே
இப்படி கூறுகிறார்.
இந்த சிவவேடத்தை எவ்வாறு தரிக்க
வேண்டும் என்பதை பின்வருமாறு
விளக்குகிறார்.
"ஊணடாசிவவேட மார்க்கந் தன்னை
உறுதியாய் சொல்லுகிறேன் உனக்காய்
மைந்தா
காணடா ஜெபமதலை அன்பத்தொன்று
கணக்காக ருத்ராட்சங் கையிலேந்து
தானடா யோகதெண்டு அளவை கேளு
தனதான அணிவிரல் முப்பத்திரண்டு
பேணடா அளவாகச் செய்துகொண்டு
பேணியே கைதனிலே எடுத்துக் கொள்ளே."
- அகத்தியர் -
"கொள்ளடா விபூதி உத்தளமாய்ப்பூசி
கொண்ட பின்பு வேட்டியுட அளவைக் கேளு
நல்லடா அகலமது மூன்று முழமாகும்
நலமான நீளமது ஆறு முழமாகும்
உள்ளடா பீனஞ்சாண் அகலங் கூட்டி
உத்தமனே நீளமது நால் சாணாகும்
அள்ளடா காவியிலே நீர்க்காவியாகும்
அரகரா சிவவேட மகிமைதானே."
- அகத்தியர் -
ஒருவகையான நீர்க் காவி நிறத்தில் ஆன ஆறு
முழ நீளமும் மூன்று முழ அகலமும் கொண்ட
வேட்டியும், அதே நிறத்திலேயே நான்கு சாண்
நீளமும் ஒரு சாண் அகலமும் உள்ள பீனமும்
எடுத்து அணிந்து கொள்ள வேண்டும்
என்கிறார். பின்னர் ஐம்பதியொரு உருத்திராட்ச
மணிகளைக் கொண்ட செபமாலையும்,
முப்பதியிரண்டு விரல் கடை நீளமுள்ள யோக
தண்டமும் தயாரித்துக் கையில் வைத்துக்
கொள்ள வேண்டுமாம். உடலெங்கும்
வீபூதியையும் நன்கு பூசிக் கொண்டால்
இந்த கோலமே “சிவ வேடம்” என்கிறார்
அகத்தியர்.
இந்த சிவவேடமே அனைத்து வகையான
செபங்களுக்கும் சிறப்பானது என்கிறார். இந்த
கோலத்தில் உருத்திராட்ச மணி மாலையைக்
கொண்டு செய்யப் படும் எந்த ஒரு செபமும்
சித்திக்கும் என்றும், இத்தகைய செபங்கள்
மகிமை வாய்ந்தது என்றும் கூறுகிறார்.
நாளைய பதிவில் உருத்திராட்ச மணி
மாலையைக் கொண்டு செய்தொழில்
வெற்றியடையவும், எண்ணிய எண்ணங்களை
நிறைவேற்றவும் கூடிய வசிய முறை
ஒன்றினைப் பற்றி பார்ப்போம்...
காரிய சித்தி தரும் உருத்திராட்ச செபம்!
--------------------------------------------------------------
நாம் அனைவருமே நாம் செய்யும் செயல்கள்
யாவும் இலகுவாக வெற்றியடைய வேண்டும்
என எண்ணுவது இயல்பு. ஆனால்
அனைவருக்கும் அது சாத்தியமாவதில்லை.
இதற்கு பலவேறு காரணங்களைச்
சொல்லலாம். எனினும் கடினமான உழைப்பு
அல்லது விடா முயற்சி போன்றவை
வெற்றியைத் தரும் என்றாலும், அந்த
நோக்கில் வெற்றிக்கு உதவக் கூடிய வசிய
செபமுறை ஒன்றினை அகத்தியர்
அருளியிருக்கிறார்.
அகத்தியர் தனது மாணவரான
புலத்தியருக்குச் சொல்வதாக இந்த பாடல்
அமைந்திருக்கிறது.
"உரையான உலகத்தோர் செபங்கள் செய்ய
உரைக்கிறோம் புலத்தியனே உண்மையாக
மரையான செபமணிதான் சொல்லக்கேளு
மனிதர்களி லஷ்டதொழிலாடு வோர்க்கு
கரையான வசியமடா வாலைவாலை
கண்மணியே ருத்திராட்ச மணியேகேளு
அரையான நூற்றியெட்டு மணிதானாகும்
அப்பனே ஆறுமுக மிருக்கச் செய்யே."
- அகத்தியர் -
"செய்யப்பா செகப்பு நூல்பட்டதாகும்
செயலான யிழையாறு முறுக்கி நீதான்
உய்யப்பா ருத்திராட்ச மணியதனிற்கோர்த்து
ஓகோகோ லெட்சமுரு வசியஞ்செய்தால்
அய்யப்பா அஷ்டவசியந் தானாகும்
அருளினோம் வசியமணி அடைவாகத்தான்
நையப்பா வசிய மென்னால் சொல்லப்போமோ
நாவதனால் சொல்வதற்கு வாயில்லையே."
- அகத்தியர் -
ஆறு முகங்களை உடைய 108 உருத்திராட்ச
மணிகளைக் கொண்டு மாலை தயாரித்திட
வேண்டுமாம். இந்த மணிகளை கோர்பதற்கு
அடர்த்தியான சிவப்பு நிறத்தினால் ஆன பட்டு
நூல் பயன்படுத்திட வேண்டும் என்கிறார்.
இப்படி தயாரிக்கப் பட்ட மாலையைக்
கொண்டு வசிய மூல மந்திரத்தினை ஒரு
லட்சம் தடவை கவனக் குவிப்புடன் செபிக்க
அட்ட திக்குகளும் வசியமாகுமாம். உலகத்தில்
தொழில் செய்வோர் அனைவருக்கும் உகந்த
செபம் என்கிறார் அகத்தியர். இந்த செபத்தினை
ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும்
செபிக்கலாம்.
வசிய மூல மந்திரம்...
"ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும்
சுவாகா"
பாவம் தீர்க்கும் உருத்திராட்ச மணிமாலை செபம்!
-----------------------------------------------------------------------------
மனிதராய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு
வகையில் தங்கள் வாழ் நாளின் கணிசமான
நேரத்தினையும், பாடுபட்டு சேர்த்த
தங்களுடைய செல்வத்தினையும் கொண்டு
செய்த பாவங்களை தீர்க்கவும்,
புண்ணியங்களை சேர்க்கவுமே
செலவிடுகிறோம். அநேகமாய் இதற்கு யாரும்
விதிவிலக்காய் இருந்திட முடியாது.
பாவங்கள் சேர்வதும், புண்ணியங்கள்
சேர்வதும் நமது எண்ணம், செயல்,
சிந்தனைகளை ஒட்டியே அமைகிறது.இதை
உணர்ந்தவர்கள் பாவங்களை தவிர்த்து
புண்ணியங்களை சேகரிக்கின்றனர். இப்படி
அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை
தீர்க்கும் முறையொன்றினை அகத்தியர்
அருளியிருக்கிறார். இந்த முறையை இங்கே
பகிரக் காரணம் உருத்திராட்சத்தின் மகிமையாக
கூறவரும் இடத்தில் அகத்தியர் இந்த
செபமுறையினை விவரித்திருப்பதால்தான்...
வாருங்கள் அகத்தியர் மொழியில் இந்த
முறையினைப் பற்றி பார்ப்போம்...
"நேரப்பா தேகசுத்தி நன்றாய்ச் செய்து
சிவசிவா வென்று திருநீறுபூசி
வடகிழக்கு முகமாக இருந்துகொண்டு
பக்குவமாய் ருத்திராட்சங் கையில்வாங்கி
விண்ணப்பா தான்நோக்கி நயமவசியென்று
விரும்பியே லட்சமுருவே செய்தால்
பண்ணியதோர் பாவமெல்லாம் மைந்தாமைந்தா
பருதிகண்ட பனிபோலே பறக்குந்தானே"
- அகத்தியர் -
நன்கு நீராடிய பின்னர், உயர்ந்த திருநீற்றினை
சிவ சிவ என்னும் சிவ மந்திரத்தைக்
கூறியபடியே உடலில் பூசிக் கொள்ள
வேண்டுமாம். பின்னர் உருத்திராட்ச
மாலையினை கையில் எடுத்துக் கொண்டு
வடகிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள
வேண்டும் என்கிறார். இந்த நிலையில்
வானத்தைப் பார்த்தவாறே “நயமவசி” என்னும்
மந்திரத்தை உருத்திராட்ச மணி மாலையினை
உருட்டியவாறே ஒரு லட்சம் தடவை செபிக்க
வேண்டும் என்கிறார். இப்படி செய்வதன்
மூலம் சூரியனைக் கண்ட பனிபோல்
பாவமெல்லாம் விலகிவிடும் என்கிறார்
அகத்தியர்.
எளிய முறைதானே... முயற்சித்துப்
பாருங்களேன்!
சிவ சிவ சிவ சிவ நமசிவாய....................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...