திங்கள், 27 ஜூன், 2016

முன் ஜென்ம பாவம் போக்கும் சித்திரகுப்தர் கோவில்

சித்திரகுப்தர். இவரை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். சிவன் தன் கைகளால் ஒரு அழகான சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தாள் அம்பிகை. இப்படி உயிர் பெற்ற சித்திரமே சித்திரகுப்தர். அன்னை பராசக்தி அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்த நாள் ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் என்பதுவும் இதில் விசேஷம். அதனால் கூட அவருக்கு சித்திரகுப்தர் என பெயர் பொருந்தியது. பிறந்து வளர்ந்தவனுக்கு ஒரு வேலை வேண்டாமா?. அதனால் சித்திரகுப்தருக்கு ஒரு வேலையும் தந்தார் இறைவன். மனிதர்கள் செய்யும் பாவ – புண்ணிய கணக்கை எழுதி, மறுபிறவியில் அதற்கு ஏற்ப வாழ்க்கை நிலை அமைத்து தருவதுதான் சித்திரனின் வேலை. ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம், “ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்“ இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். முன் ஜென்மம் இருந்ததா – இல்லையா? என்றால் நிச்சயமாக நம் எல்லோருக்கும் இருந்தது. “ஜடாதரராகிய“ என்ற முனிவர், காட்டின் வழியாக வந்து கொண்டு இருந்தார். இருட்டிவிட்டது. இதை கண்ட ஆகுகன் – ஆகுகி என்ற வேட தம்பதிகள், “இந்த இருட்டில் நடந்து சென்றால் உங்களுக்கு மிருகத்தால் ஆபத்து வரும். அதனால் எங்கள் குடிசையில் தங்கி மறுநாள் செல்லுங்கள்.“ என்றனர் முனிவரிடம். கனிவான பேச்சு, ஜடாதரராகி முனிவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. சரி என்று வேடனின் குடிசையில் தங்க சம்மதித்தார். மிகவும் சிறிய குடிசையாக இருப்பதால் இரண்டு பேருக்கு மேல் தூங்க கூட முடியாத அளவில் மிகச்சிறு குடிசை அது. அதனால் முனிவர், “அப்பா… நான் வெளியே படுத்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் உள்ளே உறங்குகள்.“ என்றார். அதற்கு வேடனோ, “நீங்கள் விருந்தினர். விருந்தினரை வாசலில் படுக்கவைப்பது முறையல்ல. அதனால் நானும் என் மனைவியும் வெளியே உறங்கிக்கொள்கிறோம்.“ என்றார் ஆகுகன். “ஒரு பெண்ணை வெளியே படுக்கவைப்பதா.? அது பாவச்செயல்.“ என்றார் ஜடாதரராகி முனிவர். “சாமீ.. நீங்கள் என் தந்தையை போன்றவர். நான் உள்ளே உறங்குகிறேன்.“ என்று கூறி முனிவரும் ஆகுகியும் குடிசைக்குள் உறங்கினார்கள். வேடன் குடிசையின் வெளியே உறங்கினான். விடிந்தது – விடிந்ததும் குடிசையைவிட்டு வெளியே வந்து பார்த்தாள் வேடனின் மனைவி ஆகுகி. “அய்யோ…“ என கதறி துடித்தாள் அவள். அவள் கதறலை கேட்டு பதறிய முனிவர், வெளியே வந்து பார்த்தார். ஏதோ ஒரு கொடும் மிருகத்தால் வேடன் கொல்லப்பட்டு கிடந்தான். அவன் உடலை மிருகங்கள் குதறி துண்டாக்கி இருந்தது. தன் கணவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தாள் ஆகுகி. கணவரின் உடலுக்கு தீ மூட்டிவிட்டு முனிவர் தடுத்தும் கேளாமல் அதிலேயே அவளும் உடன்கட்டை ஏறினாள். என்னை தம் தந்தையாக கருதி உபசரித்த இப்பிள்ளைகள், என்னால்தானே இந்த கொடிய நிலையை அடைந்தனர். பிள்ளைகள் தம் கண் முன்னால் எரிவதை பார்ப்பவன் எத்தனை பாவம் செய்த பாவி என நினைத்து துடித்தார் முனிவர். அதனால் அவரும் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்து தன் உயிரையும் விட்டார் முனிவர். இந்த மூவரும் மறுபிறவி எடுத்தார்கள். வேடன் நிஷததேசத்தில் வீரசேன மகாராஜனின் மகனாக நளன் என்ற பெயரில் பிறந்தார். ஆகுகி, விதர்ப்ப தேசத்தில் வீமராஜன் மகளாக தமயந்தி என்ற பெயரில் பிறந்தாள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயல் பாவச்செயல்தான் என்பதால் முனிவராக இருந்து தம்பதிகளை பிரித்த பாவத்திற்காக மறுபிறவில் அன்னப்பறவையாக பிறந்து, நள – தமயந்தியை சேர்த்து வைத்தார் அன்னப்பறவை வடிவில் பிறந்த முனிவர் என்கிறது நள – தமயந்தி சரித்திரம். முன்ஜென்மம் இருக்கிறது என்று புராணகதைகளில் மட்டும் சொல்லவில்லை. இக்காலத்திலும் பல சம்பவங்கள் நமக்கு கிடைக்கிறது. ஒரு செய்திதாளில் வந்த தகவல். அதில் – பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சிறுவன் தன் பூர்வ ஜென்ம நினைவு திரும்பப் பெற்றான். போன ஜென்மத்தில் வாழ்ந்த இடத்திற்கு சென்று, அங்கு இருந்த முதிய பெண்மணியை கண்டு அழதான். “தன் மகன் மகள் திருமணம் நடந்ததா? மகள் திருமணத்தில்தான் நான் இறந்தேன்.“ என்று பழைய சம்பவங்களை எல்லாம் சரியாக சொல்லி சுற்றி நின்ற உறவினர் நண்பர்களையும் சரியாக பெயர் சொல்லி அழைத்து அதிர வைத்தான். இப்படி போன ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் இந்த ஜென்மத்தில் பெரிய பாதகத்தை கொடுக்க கூடாது என்ற கருத்தில்தான் சிவசக்தியே சித்திரகுப்தரை உருவாக்கினர். திருமணதடை, சொத்து தகராறு, உடல் உபாதைகள் குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பிரச்சனைக்களுக்கு காரணம் முன் ஜென்ம கர்மவினையே என்கிறது நம் இந்து சமயம். சித்திரகுப்தரை வணங்கினால் பாவங்கள் குறையும். பாவங்கள் குறைந்தால்தான் நல்ல நேரத்தில் இன்னும் பல நல்ல விஷயங்கள் நடக்கும். காஞ்சிபுரம் பஸ் நிலையத்தின் அருகே சித்ரகுப்தரின் கோவில் இருக்கிறது. அவரின் ஒரு கையில் ஒலைச்சுவடியும் மற்றொரு கையில் எழுத்தாணியும் இருக்கும். நாம் இவரை வணங்கினால் ஞானமும் ஏற்றமும், கேதுவால் வரும் தொல்லையும் நீங்கும். அத்துடன் பாவங்களும் குறைய வாய்ப்பும் இருக்கிறது என்கிறது ஸ்தல புராணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...