நவக்கிரகங்களிடம் காலவ முனிவர் வரம் வேண்டுதல் ஒரு சமயம் இமயமலை சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார் "காலவர் " என்ற மகா முனிவர் ஒருவர். முக்காலமும் அறிந்தவர். அவரிடம் வந்த துறவி ஒருவர் தன்னை பற்றிய வருங்காலத்தை தெரிவிக்குமாறு கேட்டார். அத்ற்கு காலவரோ " துறவியே, எனது ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்ட உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை" எனக் கூறினார். அதற்கு துறவியோ " முனிவரே அனைவரது வருங்காலம் பற்றி கூறும் உமது எதிர்காலம் பற்றி உமக்கு ஏதும் தெரியுமா" என வினவ. காலவர் " நீர் யார் ? " எனக் கேட்டார். துறவி " நான் தான் கால தேவன் " எனக் கூறி மறைந்தார். காலவ முனிவரும் தன் வருங்காலம் எப்படி இருக்கும் என தனது ஞானதிருஷ்டியால் காண, தன்னை , முன் வினைப் பயனால் " குஷ்ட நோய் " பிடிக்கபோவதை உணர்ந்தார். முன்வினைப் பயங்களுக்கு வினைகளை தருபவர்கள் நவக்கிரகங்களே என்றெண்ணி, அவர்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தை மெச்சிய நவகிரகர்கள் என்ன வரம் வேண்டு எனக் கேட்க, தன்னை குஷ்ட நோய் பீடிக்காமல் காத்தருள வேண்டினார். நவக்கிரக நாயகர்களும் அவ்வாறே ஆகட்டும் என ஆசீர்வதிதனர். இதனை அறிந்த பிரம்ம தேவர் நவகிரகங்களின் மேல் கடும் சினம் கொண்டார்.
நவக்கிரகங்கள் பிரம்மனிடம் சாபம் பெறுதல்
" நவக்கிரகங்களே, தேவர்களாய் இருப்பினும் தனித்து இயங்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. சிவனின் ஆணைப்படியும், கால தேவனின் துணையுடனும் மட்டுமே நீங்கள் அவரவர் வினைக்கேற்ப நன்மை, தீமைகளை அளிக்க வேண்டும். இதை மீறி காலவ முனிவரை நீங்கள் காத்ததால், அத் தொழு நோய் உங்களை பிடிக்கும் " என்றார் பிரம்ம தேவர். கலங்கின நவகிரகங்கள். பிரம்மனின் திருவடி பற்றி சாப விமோஷனம் கேட்டனர். மனமிறங்கிய நான்முகனும் அவர்களிடம், "அர்க்கவனம் என்ற தலம் சென்று அங்கு வீற்றிருக்கும் பிராணவரதரையும், மங்கல நாயகியையும் வழிபடுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்று கிழமை தொடங்கி 12 ஞாயிற்று கிழமைகள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமைகள் தோறும் நீராடி, வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி தயிர் அன்னம் வைத்து உண்ணுங்கள் " என்றார். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க சொன்னார்.
நவக்கிரகங்களும் அவ்வாறே அர்க்கவனம் வந்து அப்பனையும், அம்மையையும் வழிபட்டனர். பிரம்மனது சாபத்தால் தொழு நோய் அவர்களை பற்றியது. அச் சமயம் அங்கு வந்த அகத்திய முனிவர், வழிபாடு முறை பற்றி விளங்கச் சொன்னார். அர்க்கவனத்தின் வட கிழக்கு பகுதியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார். கடுமையான உண்ணா நோன்பும், திங்கட் கிழமைகள் மட்டும் எருக்க இலையில் சிறிது தயிர் அன்னம் புசிக்க சொன்னார். அர்க்கவனத்தில் இருந்த ஒன்பது தீர்த்தங்களையும் ஆளுக்கு ஒன்றாக தேர்ந்து எடுத்து நீராடச் சொன்னார். எருக்க இலையில் தயிர் அன்னம் உண்ணும் பொழுது, அந்த இலையின் ஒரு அணுப் பிரமான அளவு அன்னத்தில் கலக்கும். அதுவே குஷ்ட நோய் தீர்க்கும் எனவும் விளக்கினார்.
நவக்கிரகங்கள் தங்கள் சாபம் நீங்கப் பெறுதல்
இவ்வாறு 78 நாட்கள் கடும் தவம் செய்த பின்னர், 79 ஆம் நாள்பிராணவரதரும் மங்கல நாயகியும் நவக்கிரகங்களுக்கு காட்சி தந்து " நவக்கிரகர்களே, உமது தவம் மெச்சினோம். உம்மை பற்றிய தொழு நோய் முழுவதும் நீங்கட்டும். இந்த அர்க்க வனத்தின் வட கிழக்கு பகுதியில் ஒர் ஆலயம் உண்டாக்கி, உம்மை வந்து வழிபடுபவரது நவக்கிரக தோஷங்களை தீர்ப்பீராக. இத் தலம் நவக்கிரகர்களுக்கு உரிய பரிகார தலமாக விளங்கட்டும் " என அருளினார்.
காலவ முனிவர் நவக்கிரகங்களுக்கென ஆலயம் அமைத்தல்
இதனிடையே, தன்னால் நவக்கிரகர்கள் தொழு நோயால் பிடிக்கப்பட்டதை அறிந்த காலவ முனிவர், ஓடோடி வந்து நவக்கிரகர்களிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டார். நவ நாயகர்களும் அவரை மன்னித்து தாங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வினாயகரை வழிபட்டனர். சாப பிணியான கோள் தீர்த்ததால் இவர் " கோள் தீர்த்த வினாயகர் " என வழிபடலானார். பின்னர் காலவ முனிவரிடம், இறைவன் ஆணைப்படி தங்களுக்காக தனி சன்னதிகள் கொண்ட ஆலயம் ஒன்றை உருவாக சொன்னார்கள். முனிவரும் அவ்வாறே, திருக் கோயில் ஒன்றை அமைத்து நவக் கிரக நாயகர்களை தனி சன்னதிகளில் பிரதிஸ்டை செய்தார்.
பிராண வரதேஸ்வரரும் , மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ள திருத்தலம் " திருமங்கலக்குடி " என்றும், நவக்கிரக நாயகர்கள் தனி சன்னதிகள் கொண்டு அருளும் தலம் " சூரியனார் கோவில் " என்றும் வழிபடலாயிற்று. சூரியனார் கோவில் வழிபாட்டை திருமங்கலக்குடியில் இருந்துதான் துவங்க வேண்டும். நவக்கிரக வழிபாட்டில் முதல் திருத் தலமாக விளங்குவது இத் திருமங்கலக்குடி. மாங்கல்ய பலம் அருளும் மங்கலநாயகி
அந்நாளில் அரசனுக்கு சேர வேண்டிய வரிப் பணத்தை கொண்டு மந்திரி ஒருவர் கோவில் கட்டும் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். ஒரு நாள் இதனை அறிந்த மன்னன் " தனக்கு சேர வேண்டிய பணத்தை கொண்டு எனக்கே தெரியாமல், என் அனுமதியில்லாமல் ஆலயம் கட்டுவதா? " என சினம் கொண்டு அமைச்சரை சிரச் சேதம் செய்ய ஆணையிட்டான். ஆணையும் நிறைவேறியது. துடிதுடித்துப் போன அமைச்சரின் மனைவி, இத் தலம் வந்து அம்மையிடம் " தனது கணவனை உயிர்ப்பித்து தருமாறு " வேண்டினாள். அம்மையும் அவ்வாறே அமைச்சரை உயிர்ப்பித்து தந்தாள். அமைச்சரின் மாங்கல்ய பலத்தினை தந்திட்ட இத் தல அம்பாள் "மங்கலநாயகி" எனவும், இறைவன் பிராணனை திரும்ப தந்ததால் " பிராணவரதேஸ்வரர் " எனவும் வழிபடப்படுகின்றனர். பஞ்சமங்கள ஷேத்திரம்
நவக்கிரகங்களின் தோஷங்களையே நீக்கிய இத் திருத் தலத்தினை வழிபட்ட பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். நோய்கல் தீர்க்கும் திருத்தலம் இது. வியாதி உள்ளவர்கள், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கி தொடர்ந்து 11 ஞாயிற்று கிழமைகள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டு அப் பிரசாதத்தினை உட்கொண்டால் வியாதிகள் அனித்தும் முற்றிலும் நீங்கப் பெறலாம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள தீர்த்தம் மற்றும் மங்கள கோயில் என "பஞ்சமங்கள ஷேத்திரமாக" விளங்கும் திருத்தலம் இது
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நீங்கள் , நவ கிரக யாத்திரை தொடங்குவதாக இருந்தால் , முதலில் இந்த ஆலயம் சென்று விட்டுப் பின், நவ கிரக ஸ்தலங்களுக்குச் செல்லவும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக