புதன், 15 பிப்ரவரி, 2017

காதல் ஜோதிடம்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடி அசைந்ததா? முதலில் வந்தது முட்டையா.. கோழியா? என்பது போல காதலிலும் ஒரு சந்தேகம் தீரா கேள்வி. காதல் வந்ததால் மனித குலம் தோன்றியதா.. மனித குலம் தோன்றிய பிறகு காதல் வந்ததா? ஆகமொத்தம்.. எதிர்ப்புகள் இருந்தாலும் மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. ஜோதிட கலையை, ஜோதிட சாஸ்திரத்தை மிகப்பெரிய கடலுக்கு ஒப்பாக
சொல்வார்கள். எந்த விஷயத்துக்கும் அசைக்க முடியாத தீர்வுகள் இந்த கலையில் இருக்கின்றன.

ஏதோ ராசிபலன், நாள், நட்சத்திரம், பொருத்தம், தோஷம் என்ற அளவில்தான் சாதாரண மக்களுக்கு இந்த கலை பரிச்சயம். ஆனால் மகரிஷிகள், யோகீஸ்வரர்கள் எழுதி வைத்து நமக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளின்படி தனி மனிதனின் யோக அவயோகங்களை பற்றி மட்டுமின்றி, உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் தன்மைகள், செயல்பாடுகளையும் நாம் ஜோதிடம் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். மனித வாழ்க்கை என்பதே சுகத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஐம்புலன்களுக்கும் ஒவ்வொரு வகையில் சுகம் கிடைக்கிறது. தொடுதல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், ரசித்தல் என எல்லாமே ஒருவகை சுகம்தான்.

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் உணர்ச்சியும், சுகமும் உள்ளது. அந்த வகையில் மனிதனுக்கு இந்த உணர்ச்சி, சுகம், காதல் என்பது முக்கிய தேவையாக உள்ளது. அதையும் கருத்தில் கொண்டே திருமண பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என பார்க்கலாம். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், அமைப்புகள் ஆகியவை பொதுப் பலன்களாகும். பண்டைய நூல்கள் பலவற்றில் கூறப்பட்ட கருத்துகளின் சாராம்சமே இங்கு கூறப்பட்டுள்ளது. சிலருக்கு ஒத்துப்போகும். சிலருக்கு ஒத்துப்போகாமலும் இருக்கலாம்.

காதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள்

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன.

குரு:

ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.

சுக்கிரன்:

இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

செவ்வாய்:

இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

புதன்:

ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

சந்திரன்:

மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.

காமத்தை நிர்ணயிக்கும் வீடுகள்

ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12-ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

அதிரடி காதலர்கள்

மூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12-ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.

உஷார் லவ்வர்.. உஷார்!

நான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

காதல் இனிக்குமா?

ஏழாம் இடம்: இந்த இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும். ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும்.

ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.

காதல் சொதப்பும்!

12-ம் இடம்: இந்த இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.

விவகாரமான சனி-சந்திரன்

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், ஏழாம் அதிபதியும் பலம் குறைந்து நீச்சமாக இருப்பது, ஏழாம் வீட்டில் ராகு-சனி, சுக்கிரன்-கேது இருப்பது. நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் சனியும், சனி வீட்டில் சுக்கிரனும் இருப்பது ஆகியவை இருந்தால் பெண்கள் மீதே அவர்களுக்கு நாட்டம் ஏற்படலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள்தான் யோக, அவயோகத்துக்கு காரணமாக இருக்கிறது. நன்மை, தீமை இரண்டுக்குமே கிரகங்கள்தான் காரணம். ஒருவருக்கு கிடைக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையுமே ‘பிராப்தம்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதனால்தான் திருமண பொருத்தத்தின்போது ஜாதக பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள். இதில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகள் எல்லாம் இருந்தபோதிலும், சில நேரம் கைகூடாமல் போகலாம். அதற்கு வேறு கிரக சேர்க்கைகள் காரணமாக இருக்கும். மேலும் காதல், காமம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நீச்ச கிரக, பாவ கிரக, திசா புக்தி அந்தரங்களில் தொடர்புகள் ஏற்படுகின்றன. ராசிநாதன், லக்னாதிபதி பலமாக இருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் சஞ்சலம், சபலம் அடையமாட்டார் என்று அடித்து சொல்லலாம். இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.

சுக்கிரன் – செவ்வாய்

ஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.

சுக்கிரனும், செவ்வாயும்

கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்.. காதலுக்கு உகந்த இடம் எது?

பள்ளியில் தொடங்கி, கல்லூரி, பணி புரியும் இடம் என எல்லா இடங்களிலும் காதல் மலர்கிறது.  இளம் வயது என்பது பக்குவம் இல்லாத வயது என்பதால் அப்போது மலரும் ஈர்ப்பை காதலாக கருத முடியாது. கல்லூரி காலம் என்பது குழப்பமான பருவம் என்பதால், அந்த காதலும் பெரும்பாலும் சக்ஸஸ் அடைவதில்லை. ஓரளவு பக்குவம் வந்த பிறகு மலரும் காதல்தான் அன்யோன்யமாக, நீடித்திருப்பதாக அமைகிறது. இதுவும் ஜாதகம் மற்றும் அந்தந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்ததே. பள்ளி, கல்லூரி பருவத்தில் லக்னாதிபதி, 5-ம் எண் அதிபதி ஆகியோர் வலுவாக இருந்தால் காதல் போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லாது. கிரகங்களின் அனுக்கிரகத்தால் நீங்கள் பொறுப்பு உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அமைந்தால் காதலின்பால் நாட்டம் ஏற்பட்டு வழிதவறி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

செவ்வாயும் ராகு கேதுவும் தோஷமா? சந்தோஷமா?

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகு-கேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12-ல் இருந்தால் தோஷம். ராகு-கேது லக்னம், 2, 7, 8-ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8-ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8-ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள். ஜோடிகள் இடையே காதல் சுகம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இலைமறை காய்மறையாக ‘தோஷ ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

ராகு-கேது விஷயத்திலும் அதே அணுகுமுறைதான். லக்னத்துக்கு 7, 8ல் ராகு-கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ‘தோஷம்‘ என்று சொல்லி சம தோஷ ஜாதகத்தை சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.

கள்ளக்காதல் ரகசியம்

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8-ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...