திங்கள், 23 மார்ச், 2015

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எனும் சக்தியை மூச்சு எனும் மூலக் கனலால் கிளப்பி உச்சி வரை ஏற்றி விடுவீர்களேயானால், அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் ப்ரம்ம கபாலத்தில் இருந்து அமிர்தமானது சுரக்கும். அதை உண்டு சுகித்து, லயித்திருக்கும் போது உடம்பெல்லாம் வியர்த்து குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். இதுவே இரகஸ்யம். அதாவது மூச்சு எனும் நெருப்பும், நெய் எனும் அமிர்தமும், வியர்வை எனும் நீரும் நம்மிடத்திலே இருப்பதை யோகத்தால் அறிந்து, சொல்ல வல்லமை உடையவர்க ளானால், எல்லை கடந்த ஜோதியாகிய ப்ரம்மத்தில் கலந்திருக்கலாம்.
இந்த மூச்சு எனும் சூக்கும நிலையை உணர்த்தும் பொருட்டே காலைத்(காற்று) தூக்கி நடனம் ஆடுவது போல நடராஜர் சிலையை வடிவமைத்தனர் முன்னோர்கள். பரம் என்றால் ஆகாயம் அல்லது விண் அல்லது வெட்டவெளி பரமசிவம் என்றால் பரமாத்மா. பரமசிவமான பரமாத்மா நடனம் ஆடுவது போலக் காட்சி தரும் சித் + அம்பரம் சிதம்பரம் ஆகாயத் தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். அங்கே பக்தர்களுக்குக் காட்டப்படும் சிதம்பர இரகசியமும் வெட்டவெளியாகிய பரத்தைக் குறிப்பதே. அதாவது விண் என்கிற வெட்டவெளி. விண்ணே உயிராக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கியும், பிறகு வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வலது காலைக் காது வரை நீட்டி இடது கையை மேல் தூக்கி நடனம் ஆடும் போது போட்டியாக உடன் ஆடிய காளியானவள் காலைக் காது வரைத் தூக்க வெட்கம் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டதாக புராணக் கதை சொல்வார்கள். அந்தக் கதையின் உள் நோக்கத்தை சொல்வார் யாருமில்லை.
ப்ராணாயாமம் அல்லது சந்தியாவந்தனம் செய்பவர்கள் முதலில் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதற்காகவே நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டப்பட்டது. பிறகு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதே நடராஜர் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுவது. உலைக்களத்தில் இரண்டு தோல் துருத்திகளை வைத்து இரண்டு கைகளால் மாற்றி மாற்றி அமுக்கி ஊதுவது போல வலதுகைப் பெருவிரல் மோதிர விரல்களை வலது இடது நாசிகளில் வைத்து, இரண்டு நாசிகள் வழியாகவும் ஒன்றை அடைத்து ஒன்றன் வழியாக மாற்றி மாற்றி காற்றை உள் இழுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மூச்சுகளையும் பின்னலாய் பின்னி உள்ளிருத்து நிறுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதே நடராஜர் ஒற்றைக் காலை காது வரை மேலே தூக்கி ஆடுவது போலக் காட்டப்படுவது.
குண்டலினி சக்தியே காளியாகச் சொல்லப்படுவதாகும். முறையாகப் பிராணாயாமம் செய்து வந்தால் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு உச்சி நோக்கி பயணிப்பாள் என்பதாகும். ஜீவாத்மா பரமாத்மாவை அடையத் தடையாக இருக்கும் மலங்கள் அனைத்துமே அரக்கனாக சித்தரிக்கப் படுகிறது. மூச்சுக் காற்றினால் குண்டலினியை மேலேற்ற முடியுமானால் நம் மேன்மைக்குத் தடையாக இருக்கும் மல மாயங்களாகிய அரக்கனை பரமாத்மாவானது அழித்துவிடும் என்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது. நாம் விடும் மூச்சுக்கு கால் எனறும் நூல் என்றும் பெயர் உண்டு. நூல் என்றோ ஒரு நாள் அறுபட்டு விடும் எனவே காலாகிய காற்றைப் பிடித்து மேலேறி வரவேண்டும் என்பதை விளக்குவதே நடராஜர் தத்துவம். அவர் காட்டுகிற அனைத்து நடனங்களும் யோகத் தத்துவங்களை உணர்த்துவதேயாகும்.
வலது, இடது மூக்குத் துவாரங்கள் சேருமிடம் புருவமத்தி. அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் சேருமிடம். இந்த இடத்தையே திரிவேணி சங்கமம் என்பார்கள். நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் பின்னலாய்ப் பின்னி எழுந்து நின்று விளையாடுவது போல இடகலையும், பிங்கலையும் கூடி புருவமத்தியில் சுழுமுனையோடு சேர்ந்து விளையாடும் இரகசியங்களை தெரிந்து கொள்ளாமலேயே மாண்டு போன மானிடர்கள் பல கோடி உண்டு. வலது நாசி, இடது நாசி இரண்டிலும் மூச்சை தனித்தனியாக இழுத்து நடத்தி, நிறுத்தி பிறகு இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து நடத்தி, நிறுத்த சக்தி உடையவர்களானால் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு ஸ்தனங்களை உடைய உமாதேவியரோடு கூடி இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வாழலாம். நாம் தினசரி சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். குருபாதம் கூறும் குறிப்பு என்றால் குரு சொல்லிக் கொடுக்கிற படி செய்தால் சூக்குமம் விளங்கும். இருபாத நாகை நாதர் என்றால் இடகலை, பிங்கலை வழியாக நடக்கும் நாகன் எனும் மூச்சைக் காட்ட கால்களைத் தூக்கி நடனஞ் செய்த நடராஜரது மலரடிகளைக் காண்பாய் நெஞ்சே. அதாவது அவர் காட்டும் வழியில் அல்லது அவர் கால்கள்(காற்று)போகும் வழியில் போய் பரத்தைக் காண்பாய் நெஞ்சே. உயர்வாய் இருந்து தான் தானாய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அறிவாய் நெஞ்சே.
.நன்றி…. -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...